இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தவர் புஜாரா. ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அவரது இடத்தை அணியில் நீண்ட நாட்கள் பிடித்து கொண்டு இருந்த சட்டேஸ்வர் புஜாரா சமீபத்தில் ஓய்வை அறிவித்துள்ளார். தனது பொறுமையான ஆட்டம், அசைக்க முடியாத மன உறுதி மற்றும் நுட்பமான பேட்டிங் திறனால் இந்திய அணிக்கு பல சரித்திர வெற்றிகளை தேடி தந்துள்ளார். இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதங்களுடன் 7195 ரன்களை அடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய புஜாராவின் ஓய்வு கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. புஜாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஜாம்பவானாக வலம் வந்தாலும், பலரும் அவரது ஒருநாள் போட்டி பற்றி பேசுவதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரராக இருந்த புஜாரா, இந்தியாவிற்காக ஒருநாள் போட்டியிலும் விளையாடி உள்ளார்.
புஜாராவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம்
புஜாராவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் குறித்து பலரும் அறியாததற்கு காரணம், அது மிகவும் குறுகியதாகவும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத ஒன்றாகவும் அமைந்து விட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகள் இருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. புஜாரா 2013 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் தனது ஒருநாள் கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு, 2014 ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் விளையாடியதே அவரது கடைசி ஒருநாள் தொடராக அமைந்தது. இந்த காலகட்டத்தில் புஜாரா மொத்தம் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி, 51 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரது ஒருநாள் சராசரி 10.20 ஆகவும், அதிகபட்ச ஸ்கோர் 27 ஆகவும் இருந்தது. 50 ஓவர் கிரிக்கெட்டிற்கு ஏற்ற பேட்டிங்கை வெளிப்படுத்த தவறியதே அவரது இடத்தை கேள்வி குறி ஆக்கியது.
ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் ஜெயிக்க முடியவில்லை?
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேனின் பொறுமை, நிதானம் மற்றும் களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நிற்கும் திறனே மிகவும் முக்கியம். இந்த அம்சங்களில் புஜாரா ஒரு தனித்துவமான வீரராக விளங்கினார். எதிரணியினர் எவ்வளவு வேகத்தில் பந்து வீசினாலும் அதனை நிதானமாக தடுத்து ஆடுவதில் பெயர் பெற்றவர் புஜாரா. எதிரணியை சோர்வடைய செய்து, ஆடுகளத்தின் தன்மையை கணித்து, அதற்கேற்ப தனது ஆட்டத்தை மாற்றி கொள்வதில் புஜாரா சிறந்தவர். ஒரு இன்னிங்ஸில் 500-க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்த இந்திய வீரர் என்ற சாதனையும் வைத்துள்ளார்.
ஆனால், ஒருநாள் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அங்கு, ஒவ்வொரு பந்திலும் ரன் அடிக்க வேண்டியது கட்டாயம். மேலும் தேவையான நேரத்தில் பவுண்டரிகளை அடிக்க வேண்டும் மற்றும் வேகமான ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும். ஆனால் புஜாராவின் இயல்பான நிதான ஆட்டம் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்திற்கு பொருந்தவில்லை. இதனால், அவரால் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முத்திரையை பதிக்க முடியவில்லை. டி20 கிரிக்கெட்டின் ஆதிக்கத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அதிரடி ஆட்டம் எதிர்பார்க்கப்படும் இந்த காலகட்டத்தில், புஜாராவை போன்ற ஒரு வீரரை ரசிகர்கள் மறக்க தொடங்கினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் உருவாக்கிய வெற்றிடம், எளிதில் நிரப்ப முடியாதது என்பது தான் உண்மை. அவரது ஒருநாள் கிரிக்கெட் பயணம் ஒரு சிறிய அத்தியாயமாக இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஒரு சரித்திர நாயகன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
About the Author
RK Spark