அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி இல்லாததால் மாணவர் சேர்க்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது: இபிஎஸ் குற்றச்சாட்டு

திருச்சி: போதிய ஆசிரியர், தரமான கல்வி இல்லாததால் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 1.40 லட்சம் குறைந்துள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று பொதுமக்களிடையே பேசியதாவது: அதிமுக ஆட்சியில் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா காலணி, புத்தகப்பை, சைக்கிள், லேப்டாப் போன்ற திட்டங்களை காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு நிறுத்திவிட்டது.

அதிமுக ஆட்சி அமைந்த பிறகு இந்த திட்டங்கள் மீண்டும் செயல்படுத் தப்படும். அதிமுக ஜனநாயகம் நிறைந்த கட்சி. அதிமுகவிலிருந்து சென்றவர்களுக்குத்தான் திமுகவில் முக்கிய பதவி கிடைக்கிறது. திமுகவில் திறமையான ஆட்கள் கிடையாது. அடுத்தமுறை ஆட்சிக்கு வர முடியாது என்கிற முடிவில்தான், திமுகவினர் கொள்ளையடிக்க ஆரம்பித்து விட்டனர்.

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 40 ஆயிரம் குறைந்துள்ளது. போதிய ஆசிரியர் இல்லாததாலும், தரமான கல்வி கிடைக்காததாலும் அரசுப் பள்ளிகளை விட்டு மாணவர்கள் வெளியேறி, தனியார் பள்ளிகளில் சேர்கின்றனர்.

சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அதிமுக என்ற அவதூறான பிரச்சாரத்தை திமுக செய்து வருகிறது. அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு நோன்பு கஞ்சிக்கு அரிசி, ஹஜ் மானியம், ஹஜ் இல்லம் கட்ட நிதி உதவி, உலமாக்கள் ஓய்வூதியம், தேவாலயங்கள் புதுப்பிக்க நிதி, ஜெருசலேம் புனித பயணம் செல்ல நிதி உதவி என பல்வேறு நலத்திட்ட திட்டங்களை வழங்கியுள்ளது.

அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்கியது. இதை சிறுபான்மையினர் உணர வேண்டும். ஆதரவு வழங்குவதும், வழங்காததும் உங்கள் விருப்பம். ஆனால், திமுக கூட்டணி கட்சியினர் செய்யும் அவதூறு பிரச்சாரத்தை மட்டும் நம்பாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.விஜயபாஸ்கர், தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.