திருவனந்தபுரம்,
கேரளாவின் திருச்சூர் நகரில் பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கு என்று தனி கட்டுப்பாடுகள் உள்ளன. அதனை முறையாக கடைப்பிடித்து பக்தர்கள் இறைவழிபாடு நடத்தி விட்டு வருவார்கள்.
இந்நிலையில், பிக்பாஸின் முன்னாள் போட்டியாளர் மற்றும் சமூக ஊடக ஆர்வலரான ஜாஸ்மின் ஜாபர் என்பவர், கோவிலுக்கு சென்றார். அவர் ரீல்ஸ் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இது வைரலானது.
எனினும், கோவில் நடைமுறைகளை அவர் சரிவர பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. இந்து மதம் அல்லாத நபரான அவர், கோவில் குளத்தில் இறங்கியுள்ளார். இதனால், கோவிலில் தூய்மை செய்யும் பணிகளை குருவாயூர் தேவஸ்வம் போர்டு மேற்கொண்டது.
இதனால், அதிகாலை 5 மணியில் இருந்து நண்பகல் வரை சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தூய்மைப்படுத்தும் சடங்குகள் இன்று நண்பகலில் முடிந்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதுவரை நளம்பலம் வழியே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதனால் பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.