புதுடெல்லி,
இளைஞர்கள், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி லட்சக்கணக்கில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் அவ்வப்போது நடந்தன. இதற்கு முடிவு கட்டும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியது. இதையும் மீறி யாராவது ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், அதனால் பி.சி.சி.ஐ.யின் (இந்திய கிரிக்கெட் வாரியம்) வருவாயில் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் முதன்மை ஸ்பான்சராக (டைட்டில்) டிரீம்11 இருந்து வந்தது. செல்போன் செயலி மூலம் விளையாடப்பட்ட இந்த ஆன்லைன் சூதாட்டத்தில் குறிப்பிட்ட கிரிக்கெட் ஆட்டம் நடக்கும் போது, இரு அணிகளையும் சேர்த்து சிறப்பாக செயல்படும் 11 வீரர்களை அடையாளம் கண்டு, அதில் அதிக புள்ளிகளுக்குரியவர்களை கேப்டன், துணை கேப்டனாக சரியாக தேர்வு செய்து இருந்தால் கோடிக்கணக்கில் பரிசு கிடைக்கும். ஆனால் பந்தயத்தில் சேருவதற்கு ரூ.49, ரூ.39 இப்படி பல்வேறு பிரிவில் பணம் கட்ட வேண்டும். இதன் மூலம் டிரீம்11-க்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டியது.
2023 முதல் 2026-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு ரூ.358 கோடி ஸ்பான்சர்ஷிப்பாக வழங்க டிரீம்11 இந்திய கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. டிரீம்11 மற்றும் மற்றொரு ஆன்லைன் ஸ்போர்ட்ஸ் கம்பெனியான மை11 சர்க்கிள் ஆகியவை இந்திய அணிகளுக்கும் (ஆண்கள், பெண்கள், ஜூனியர்), ஐ.பி.எல். போட்டிக்கும் ஸ்பான்சர் அளித்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரிய வருவாயில் அவற்றின் பங்களிப்பு சுமார் ரூ.1000 கோடியாக இருந்தது. இந்த வருமானத்தை கிரிக்கெட் வாரியம் இழக்கிறது. இனி தங்களால் ஸ்பான்ஷிப் வழங்க முடியாது என டிரீம்11 நிர்வாகிகள் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து விட்டனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே இருப்பதால் அதற்குள் புதிய ஸ்பான்சர் நிறுவனம் கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் முதலில் விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்து விளம்பரம் கொடுக்க வேண்டும். அதன் பிறகு வரும் விண்ணப்பங்களை ஆராய்ந்து அதில் தகுதி வாய்ந்த நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும். சட்டசிக்கல் உள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும்.
இதற்கு நிச்சயம் குறிப்பிட்ட காலஅவகாசம் பிடிக்கும் என இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். வருகிற 9-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்குள் டைட்டில் ஸ்பான்சர்ஷிப் கிடைக்காவிட்டால் இந்திய வீரர்களின் சீருடையில் எந்த நிறுவனத்தின் பெயரும் இடம் பெறாது என்று கூறப்படுகிறது.