RCB Cares: ஐபிஎல் 2025 சீசனில் (IPL 2025) யாருமே பெரிதும் எதிர்பார்க்காத வகையில் ஆர்சிபி அணி கோப்பையை வென்று, வரலாற்றில் அதன் முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்று ‘ஈ சாலா கப் நமதே’ என்ற வாசகத்தை ‘ஈ சாலா கப் நமது’ என மாற்றியது.
Add Zee News as a Preferred Source
இதனால் கோடாணக்கோடி ஆர்சிபி ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்தனர். ஆர்சிபி ரசிகர்கள் (Royal Challengers Bengaluru) மட்டுமின்றி கிரிக்கெட் ரசிக்கும் அனைவரும் அதே உச்சியில் இருந்தார்கள். ஆர்சிபியின் வெற்றி பலரும் பெரிய நம்பிக்கையை கொண்டுவந்தது என்றே சொல்லலாம். ஆனால் இந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. எந்தளவிற்கு மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றார்களோ அடுத்த நாளே சோகத்தின் அதளபாதாளத்திற்கு சென்று வருத்தத்தில் மூழ்கினர்.
RCB Cares: 11 பேர் பலியான சோகம்
காரணம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி நிர்வாகத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது, மைதானத்திற்கு வெளியே எக்கச்சக்கமானோர் கூடியிருந்தார்கள். விராட் கோலி, ரஜத் பட்டிதார் போன்ற வீரர்களை பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் ஒன்று திரண்டனர். அப்போது மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 11 ரசிகர்கள் உயிரிழந்தது சோக அலையை உண்டாக்கியது. 50 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கருப்பு பக்கமாக அமைந்தது.
RCB Cares: நிவாரணம் அறிவித்த ஆர்சிபி
துயரமான இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆர்சிபி நிர்வாகம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. ஆர்சிபி மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்போடப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்கு மறுநாள் (ஜூன் 5) உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்தை நிவாரணமாக வழங்குவதாக அறிவித்தது. அதுதான் ஆர்சிபி அணி போட்ட கடைசி பதிவு.
RCB Cares: ஆர்சிபி வெளியிட்ட அறிக்கை
தற்போது மூன்று மாதங்களுக்கு பின் அதாவது 85 நாள்களுக்கு பிறகு ஆர்சிபி அணி அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறது. மேலும், RCB Cares எனப்படும் அமைப்பைத் தொடங்கியிருப்பதாகவும் அந்த அணி அறிவித்திருக்கிறது. இதுகுறித்து ஆர்சிபி அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புள்ள ரசிகர்களே, இது உங்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான கடிதம்! நாங்கள் கடைசியாக இங்கு பதிவிட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகின்றன. இந்த மௌனம் என்பது துக்கம் சார்ந்தது. இந்த இடம் ஒரு காலத்தில் நீங்கள் மிகவும் ரசித்த ஆற்றல், நினைவுகள் மற்றும் தருணங்களால் நிரம்பியிருந்தது…
ஆனால் ஜூன் 4 எல்லாவற்றையும் மாற்றியது. அந்த நாள் எங்கள் இதயங்களை உடைத்தது, அன்றில் இருந்து மௌனம் அந்த மௌனம் நிறைந்துவிட்டது. அந்த மௌனத்தில், நாங்கள் துக்கப்படுகிறோம். கேட்கிறோம், கற்கிறோம். மெதுவாக, வெறும் பதிலை விட அதிகமாக ஒன்றை உருவாக்கத் தொடங்கினோம். நாங்கள் உண்மையிலேயே நம்பும் ஒன்றில்…
RCB Cares: ‘எப்போதும் அக்கறையுடன்’
இப்படித்தான் RCB CARES உயிர் பெற்றது. அது நம் ரசிகர்களை கௌரவிக்க, மீட்டெடுக்க மற்றும் அருகில் நிற்க வேண்டிய தேவையில் இருந்து முளைத்தது. நமது சமூகம் மற்றும் ரசிகர்களால் வடிவமைக்கப்பட்ட அர்த்தமுள்ள செயலுக்கான ஒரு தளம். இன்று இன்ஸ்டாரகிராமுக்கு திரும்பி உள்ளோம், கொண்டாட்டத்துடன் அல்ல, கவனத்துடன். பகிர்ந்து கொள்ள. உங்களுடன் நிற்க. முன்னோக்கி, ஒன்றாக நடக்க. கர்நாடகாவின் பெருமையாகத் தொடர. RCB CARES. நாங்கள் எப்போதும் அக்கறையுடன் இருக்கிறோம். மேலும் விவரங்கள் விரைவில்…” என குறிப்பிட்டுள்ளது.
Dear 12th Man Army, this is our heartfelt letter to you!
The Silence wasn’t Absence. It was Grief.
This space was once filled with energy, memories and moments that you… pic.twitter.com/g0lOXAuYbd
— Royal Challengers Bengaluru (@RCBTweets) August 28, 2025
RCB Cares: சின்னசாமியில் போட்டி நடைபெறாது?
கூட்டநெரிசல் ரசிகர்கள் சோகமாக்கியது மட்டுமின்றி பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கே பெரிய சேதத்தை உண்டாக்கி உள்ளது. ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் பெங்களூருவில் நடைபெற இருந்த நிலையில், அனைத்து போட்டிகளும் தற்போது மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்ரபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்வுகளை நடத்த தகுதியற்ற இடம் என்று அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.