பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஷாஹாபூர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில் 17 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 27-ந்தேதி மதியம் 2 மணியளவில் பள்ளி கழிவறைக்குச் சென்ற மாணவிக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கழிவறையிலேயே மாணவி, ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
சுமார் 9 மாதங்களுக்கு முன்பு மாணவி அடையாளம் தெரியாத நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், அதனால் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அந்த சம்பவம் மற்றும் மர்மநபர் குறித்து எதுவும் கூறவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த நபர் 28 வயதுடையவர் என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. மாணவியும், குழந்தையும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி முழுமையாக குணமடைந்த பிறகு, அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், 28 வயது இளைஞர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் சிறுமி கர்ப்பமானது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்க தவறியதற்காக பள்ளி முதல்வர், செவிலியர், விடுதி வார்டன் மற்றும் மாணவியின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி கழிவறையில் 9-ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.