வாஷிங்டன்,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வாலியில் உள்ளது. இங்கு மெட்டா, கூகுள் உள்ளிட்ட பல்வேறு டெக் நிறுவனங்களின் தலைமையகம் உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த மென்பொறியாளர்கள் இங்குள்ள நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த பிரதிக் பாண்டே என்பவர் மைக்ரோசாப்ட்டின் துணை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். கடந்த 19 ஆம் தேதி அலுவலகம் சென்ற இவர், மறுநாள் அதிகாலை அலுவலக வளாகத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் கிரிமினல் செயல்கள் நடைபெற்றதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மென்பொறியாளர் உயிரிழந்தது தொடர்பாக கருத்து தெரிவிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் மறுத்துவிட்டது. சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள பிரதிக் பாண்டே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். அதற்கு முன்பாக வால்மார்ட், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.