வாஷிங்டன்,
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை நான்தான் நிறுத்தினேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து டிரம்புக்கு பதில் அளித்தது. ஆனால் டிரம்ப் தொடர்ந்து அந்த கருத்தை தெரிவித்து வருகிறார். அதன்பின் இந்திய பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிப்பதாக அறிவித்தார். மோடியை தனது நண்பர் என்றும் இந்தியா தங்களது நெருங்கிய கூட்டாளி என்றும் கூறி வந்த டிரம்ப் திடீரென்று அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறினார். இந்தியாவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதற்கிடையே பாகிஸ்தானுடனான போரின்போது மத்தியஸ்தம் செய்ய டிரம்பை அனுமதிக்காததே இந்தியா மீதான அவரது கோபத்திற்கு காரணம் என்று தகவல் வெளியானது.இந்த நிலையில் இவ்விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசை பெற டிரம்ப் விரும்புவதாக தெரிகிறது.இதனால் இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட 7 போர்களை தான் நிறுத்தியதாக கூறி வருகிறார். டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட சில தலைவர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.
சமீபத்தில் பாகிஸ்தான் டிரம்பின் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்திருந்தது.ஆனால் நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரை பரிந்துரைக்க மோடி மறுத்ததாக நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி ஜி-7 உச்சிமாநாட்டிற்காக கனடாவில் இருந்தபோது அவரை டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாகிஸ்தான் தனது பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப் போவதாகக் கூறினார். மேலும் மோடியும் தனது பெயரை பரிந்துரை செய்ய வேண்டும் என்று சூசகமாக தெரிவித்தார். ஆனால் அதை மோடி ஏற்கவில்லை. நோபல் பரிசுக்கு டிரம்பின் பெயரை மோடி பரிந்துரைக்கவில்லை. இதன் காரணமாகவும் இந்தியாவுடன் வரி விவகாரத்தில் டிரம்ப் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.