புதுடெல்லி,
டெல்லி பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லிமினேட்டர் ஆட்டத்தில் மேற்கு டெல்லி லயன்ஸ் – தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இதில் மேற்கு டெல்லி லயன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் மேற்கு டெல்லி பேட்ஸ்மேன் நிதிஷ் ராணா, தெற்கு டெல்லி பவுலர் திக்வேஷ் ரதி இடையே மோதல் வெடித்தது. நிதிஷ் ராணா அதிரடியாக ஆடி கொண்டிருந்தபோது 8-வது ஓவரை திக்வேஷ் ரதி வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட நிதிஷ் ராணா ரன் எதுவும் அடிக்கவில்லை.
அடுத்த பந்தை வீச சென்ற திக்வேஷ் ரதி கடைசி நேரத்தில் வீசவில்லை. அடுத்த பந்தை திக்வேஷ் வீசியபோது அதை எதிர்கொள்வதிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய ராணா தக்க பதிலடி கொடுத்தார். அதனால் கடுப்பான திக்வேஷ் சில வார்த்தைகள் சொன்னார்.
அதே வேகத்தில் பந்தை எதிர்கொண்ட ராணா ரிவர்ஸ் ஸ்வீப் வாயிலாக சிக்சர் அடித்து தன்னுடைய பேட்டில் நோட்புக்கில் எழுதுவது போல எழுதி முத்தம் கொடுத்தார். கடந்த ஐ.பி.எல். தொடரில் லக்னோ அணிக்காக திக்வேஷ் விக்கெட் எடுக்கும் போதெல்லாம் புத்தகத்தில் எழுதுவது போல கொண்டாடினார். அதனால் ஒரு போட்டியில் விளையாடத் தடையும் பெற்றார்.
அந்த சூழலில் ராணா இப்போட்டியில் திக்வேஷ் ரதி ஸ்டைலிலேயே அவருக்கு தக்க பதிலடி கொடுத்தார். அதன் காரணமாக கோபமடைந்த திக்வேஷ் அவரிடம் வாக்குவாதம் செய்தார். அதற்கு ராணாவும் வாக்குவாதம் செய்ய இருவருக்குமிடையே மோதல் வெடித்தது. நடுவர் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர், போட்டி கட்டணத்தில் இருந்து ராணாவுக்கு 50 சதவீதமும், ரதிக்கு 80 சதவீதமும் அபராதமாக விதித்துள்ளார்.