சசிகாந்த் செந்தில்: "மருத்துவமனையில் உண்ணாவிரதம் தொடர்கிறது" – காங்கிரஸ் எம்.பி வெளியிட்ட வீடியோ!

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய எஸ்.எஸ்.ஏ கல்வி நிதியைக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உடல்நிலை மோசமாகியிருக்கிறது.

இரண்டாவது நாள் உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில் இரத்த அழுத்தம் அதிகரிப்பால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் இருந்தும் போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளார்.

ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவு தெரிவித்த வியாசைத் தோழர் அமைப்பினர்.

மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 31) உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலிருந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இன்று மருத்துவமனையிலிருந்து வெளியிட்ட வீடியோவில், “மருத்துவர்கள் வழக்கம்போல ‘நீங்கள் இதைப் பண்ணாதீர்கள், விட்டுவிடுங்கள்’ என்றுதான் சொன்னார்கள். ஆனால் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக இல்லை.

இது மாணவர்களின் பிரச்னை. கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்கள் பல இக்கட்டுகளை சந்தித்துவருகின்றனர். பல ஃப்லோஷிப்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன, ஸ்காலர்ஷிப்கள் நேரத்துக்கு வருவதில்லை…

எஸ்.எஸ்.ஏவில் குழந்தைகளுக்கு வர வேண்டிய பணத்தை வாங்கிக்கொடுக்க வேண்டியது எம்.பியாக என்னுடைய கடமை மட்டுமல்ல, நம் எல்லோருடைய கடமையும் கூட.

உண்ணாவிரதப் போராட்டம்

இதில் கட்சி, அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனைவரும் குரல்கொடுக்க வேண்டும். தமிழ்நாடு மாணவர்களுடன் நிற்க வேண்டுமென எந்தவித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாக கேட்டுக்கொள்கிறேன்.

நாம் பேசாவிட்டால் இது கடந்து செல்லும் விஷயமாக மாறிவிடும். இதனை ஒன்றிய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், கல்வி அமைச்சருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். அதுவரையில் உண்ணாவிரதம் தொடரும்” எனப் பேசியுள்ளார்.

எஸ்.எஸ்.ஏ என்பது சர்வ ஷிக்‌ஷா அபியான் (SSA) என்ற மத்திய அரசின் ‘அனைவருக்கும் கல்வி திட்டம்’. இதன் நிதி மத்திய மாநில அரசுகளால் பகிரப்படுகிறது.

இதில் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய பங்கு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களின் சம்பளம், பள்ளி பராமரிப்பு, இலவச பாடநூல்/உணவு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.