வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார். அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவிற்கு டிரம்ப் வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிரம்ப்பின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தகப் பிரச்சனை நீடிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.