ஹராரே,
இலங்கை – ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரையன் பென்னட் – பென் கர்ரன் களமிறங்கினர். இதில் பென்னட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரண்டன் டெய்லர் மற்றும் சீன் வில்லியம்ஸ் தலா 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். மறுபுறம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கர்ரன் அரைசதம் அடித்து அசத்தினார்.
அவருடன் ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ராசாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பென் கர்ரன் 79 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த டோனி 10 ரன்களில் நடையை கட்டினார். பின்னர் ராசாவுடன் கிளைவ் மடாண்டே கை கோர்த்தார். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஜிம்பாப்வே 250 ரன்களை கடந்தது. மடாண்டே தனது பங்குக்கு 36 ரன்கள் அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். ராசா அரைசதம் அடித்தார்.
இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் அடித்துள்ளது. சிக்கந்தர் ராசா 59 ரன்களுடனும், ரிச்சர்ட் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை தரப்பில் சமீரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை களமிறங்க உள்ளது.