காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 200-க்கும் அதிகமானோர் பலியாகினர். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் நாங்கர்ஹர் மாகாணத்தில் ஜலாலாபாத் எனுமிடத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கங்கள் குறித்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் 6.3 ரிக்டர் அளவிலும், பின்னர் 4.7 ரிக்டர் அளவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2023-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆப்கனில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கமாக இது உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 4000 பேர் வரை உயிரிழந்ததாக தலிபான் அரசு தெரிவித்தது. ஆனால் ஐ.நா சபையோ 1500 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவித்தது.
இந்நிலையில் இன்றைய நிலநடுக்கத்தில் இதுவரை 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில், தலிபான் அரசின் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஷராஃபத் ஜமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “250 பேர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகமாகலாம். கட்டிட இடிபாடுகள் உள்ள பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாடானது நிலநடுக்கங்கள் ஏற்படக் கூடிய பகுதியில் உள்ளது. அதுவும் குறிப்பாக அங்குள்ள இந்துகுஷ் மலைகளானது இந்தியா மற்று யூரேஸியா டெக்டானிக் தகடுகள் இணையும் இடத்தில் உள்ளது.