போஸ்டர் ஒட்டினால் அபராதமா? – மதுரை மாநகராட்சி தீர்மானத்துக்கு சிபிஎம் கண்டனம்

மதுரை; “நகரின் அழகு குறைவதால், போஸ்டர்கள் ஓட்டினால் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கவும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மதுரை மாநகராட்சி கூட்டம் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால் மாநகரின் அழகு குறைவதாகவும், குப்பைகள் அதிகமாவதாகவும், மாநகராட்சிக்கு அவப்பெயர் மற்றும் பொது சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூறி சுவரொட்டிகள் ஒட்டினால் ரூ.1,000 முதல் ரூ.5000 அபராதம் விதித்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகநராட்சிக்குட்பட்ட சாலைகள், தெருக்களில், கடைகள், வீடுகளுக்கு குப்பை வரி வசூல் செய்தாலும், குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோல் குவிந்து காணப்படுகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 11 கால்வாய்களில் குப்பை தேங்கி கழிவுநீர் கலந்து தூர்நாற்றம் வீசுகிறது. கால்வாய்களில் மரங்கள், செடிகள் வளர்ந்து புதர் போல் மண்டிக்கிடக்கிறது. கொசுக்கள் உற்பத்தியாகி மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் நீடிக்கிறது.

மதுரை நகர் வீதிகளில் பாதாளச் சாக்கடை ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் ஆறாக ஓடுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்து சாக்கடை நீர் கலந்த குடிநீரை மக்கள் பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. குண்டும், குழியுமான சாலைகள் சீர் செய்யப்படாமல் இரு சக்கர வாகனங்கள் செல்லும் பொதுமக்கள் விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சி வீதிகள் தூசி மண்டலமாககாணப்படுகிறது. மக்கள் மாசு கலந்து காற்றை சுவாசிக்கிறார்கள். சுவாச நோயால் பாதிக்கப்படுகிறார்கள். மாநகராட்சி நிர்வாகம் இந்த பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி தேவையான பணியாளர்களை நியமித்து துரித நடவடிக்கை எடுத்தாலே போதும், மதுரை மாநகரம் எழில் மிகு நகரமாக மாறும். சுகாதாரமான, பாதுகாப்பான, தூய்மையான மாநகராட்சியாக மதுரை மாறும். அதைவிடுத்து, போஸ்டர்கள் ஓட்டுவதால் குப்பைகள் தேங்குவதாகவும், சுகாதாரசீர்கேடுகள் ஏற்படுவதாகவும் கூறி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது எந்த வகையிலும் பொருத்தமானது அல்லது.

மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறுித்து ஜனநாயக அமைப்பகள், அரசியல் கட்சியினர், தங்களது கருத்துகளை போஸ்டர்கள் மூலமே வெளியிட்டு வரும்நிலையில் அவர்களது ஜனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.