புதுடெல்லி: வாக்கு திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம், பாஜக மீது ராகுல் காந்தி தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்து செய்தி மடல் வடிவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பல்வேறு மாநில தேர்தல்கள் மற்றும் பிஹார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
கடந்த மாதம் வாக்கு திருட்டு மோசடியை முன்வைத்து பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தை விமர்சித்திருந்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி. இதற்கு ஆதாரம், உறுதிமொழி பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் கூறி இருந்தது.
இந்நிலையில், அவர் தரப்பில் செய்தி மடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அண்மையில் பிஹார் மாநிலத்தில் அவர் மேற்கொண்ட வாக்காளர் அதிகார யாத்திரை பற்றியும் வாக்கு திருட்டு மோசடியில் பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் பங்கு தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்.
வாக்கு திருட்டு மோசடி குறித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பிரச்சாரமானது பாஜக – தேர்தல் ஆணையம் கூட்டாக இணைந்து எப்படி வாக்கு திருட்டு மற்றும் தேர்தல் மோசடியில் ஈடுபடுகின்றன என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கர்நாடக மாநிலம் மஹாதேவபுரா தொகுதியில் மட்டுமே 1 லட்சத்துக்கும் மேலான போலி வாக்காளர்கள் இருப்பதாக கடந்த மாதம் ராகுல் காந்தி கூறியிருந்தார்.
அதேபோல் இன்று காலை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜகவின் வாக்கு திருட்டு பின்னணியில் தேர்தல் ஆணையம் இருப்பதாக விமர்சித்திருந்தார். இந்த சூழலில்தான் ராகுல் காந்தியின் அறிக்கை வெளியாகி உள்ளது.