இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்றதும் தங்களது டி20 ஓய்வை அறிவித்தனர். பின்னர் இந்தாண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்தனர். இனி ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட திட்டமிட்டிருக்கின்றனர். அவர்கள் 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை நீடிக்க விருப்புகின்றனர். ஆனால் அப்போது அவர்களுக்கு 39, 40 வயதாகிவிடும் என்பதால் அவர்களை பிசிசிஐ அணியில் வைத்திருக்குமா? என்பது கேள்விக்குறி ஆகி உள்ளது.
Add Zee News as a Preferred Source
வரும் அக்டோபர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை விளையாட இருக்கிறது. அத்தொடருடன் பிசிசிஐ ரோகித் சர்மா, விராட் கோலியயும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடும் என பலரும் கூறுகின்றனர். சுப்மன் கில் தலைமையில் ஒருநாள் அணியை உருவாக்கி அதனை 2027 உலகக்கோப்பையில் பிசிசிஐ களமிறக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா மறுத்திருக்கிறார்.
இதற்கிடையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விருப்பப்பட்டபடி 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் அவர்கள் விளையாட வேண்டும் என்றால், உடலை தகுதியுடன் ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி விளையாட இருக்கும் ஒருநாள் தொடரில் கோலி, ரோகித் விரும்பினால் விளையாடலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசுகையில், அவர்கள் இந்தியா ஏ அணிக்காக விளையாடுவதற்கு அதிக வாய்ப்பில்லை. ஆனால் அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்கு முன்பாக போட்டி நேரத்தை விரும்பினால் அவர்கள் உள்ளூரில் 1 அல்லது 2 போட்டிகளில் விளையாடலாம். இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அதே வேளையில் ஃபிட்டாக இருக்கும் அவர்கள் ஆஸ்திரேலியா தொடருக்கு தேர்வாக தயாராக இருக்கின்றனர்.
இந்திய ஏ, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம், இராணி கோப்பை தொடருக்கான அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு இரண்டுமுறை நமது வீரர்கள் உடற்தகுதி சோதனையில் உட்படுத்தப்படுவர். அண்மையில் நடந்த சோதனையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கலந்து கொண்டனர் என தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் 16, 23 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி 2 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அத்தொடருக்கான இந்திய ஏ அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தொடர் முடிந்ததும் செப்டம்பர் 30, அக்டோபர் 3 மற்றும் 5ஆம் தேதிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஏ அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji