ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை 2025 தொடர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 09) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் ஹாங்காங்கை வீழ்த்தியது, இந்திய அணி யுஏஇ அணியை வீழ்த்தியது. இரண்டு அணிகளுமே ஒரு அருமையான தொடக்கத்துடன் தொடரை தொடங்கி உள்ளது. குறிப்பாக இந்திய அணி யுஏஇ அணியை 59 ரன்களில் ஆல் அவுட் செய்து 60 ரன் இலக்கை 4.3 ஓவர்களில் அடித்து அசத்தியது.
Add Zee News as a Preferred Source
இதில் இந்திய அணியில் இடம் பெற்ற ஆல்-ரவுண்டர் சிவம் துபே சிறப்பாக பந்து வீசி, ரிங்கு சிங்கின் கனவை மொத்தமாக களைத்திருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் ரிங்கு சிங்கிற்கு பதிலாக சிவம் துபேவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் மூன்றாவது பந்து வீச்சாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அவர் சிறப்பாக பந்து வீசினார்.
ரிங்கு சிங்-கிற்கு ஏற்பட்ட சிக்கல்
2 ஓவர்கள் வீசி, வெறும் 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி, சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார். ஆசிஃப் கான், துருவ் பராஷர் மற்றும் ஜுனைத் சித்திக் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றி, யுஏஇ அணியின் பேட்டிங்கிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் சிவம் துபே. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. இதன் காரணமாக வரும் போட்டிகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்திய அணியில் 6வது இடத்திற்கு ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வந்தது. சிவம் துபேவிற்கு இரண்டிலுமே அனுபவம் இருக்கிறது. பேட்டிங்கில் அதிரடி காட்டும் அவர், பந்து வீச்சிலும் ஓரளவு செயல்படுவார். அவர் சிஎஸ்கே அணியில் அவ்வப்போது பந்து வீசுவதை நம்மால் பார்த்திருக்க முடியும். மறுபுறம் ரிங்கு சிங்-கிற்கு பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீசுவார். அனால் அவர் அதிக அளவில் பந்து வீசியதில்லை. சிறந்த ஃபீனிஷராக இருந்தாலும், அவருக்கு பந்து வீச்சில் அனுபவம் குறைவு.
பிளேயிங் 11ல் வாய்ப்பில்லை
அதுமட்டுமல்லாமல், அணியில் அக்சர் படேல், குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி என மூன்று முக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், மற்றொரு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர் தேவையில்லை. இதனாலேயே பகுதி நேர வேகப்பந்து வீச்சாளரும், பேட்டிங்கில் அதிரடி காட்டும் சிவம் துபே வை இந்திய அணி தேர்வு செய்து வாய்ப்பளித்தது. அந்த வாய்ப்பையும் அவர் கனகச்சிதமாக செய்தார் என்பதால், அவருக்கு அடுத்தடுத்த போட்டியில் வாய்ப்புகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் ரிங்கு சிங் பிளேயிங் 11ல் வர வாய்ப்பில்லை என தெரிகிறது.
About the Author
R Balaji