மீண்டும் டெஸ்ட் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர்? பிசிசிஐ முக்கிய அறிவிப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக விளையாடிய அவரால், ஆசிய கோப்பையில் இடத்தை பிடிக்க முடியவில்லை. மேலும் டெஸ்ட் அணியில் இருந்தும் ஓரம் கட்டப்பட்டுள்ளார். இந்நிலையில் சுமார் 20 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான போட்டிகளில், ஷ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறாததும், அதே சமயம் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதும், இந்த சந்தேகங்களுக்கு வலு சேர்த்துள்ளது.

Add Zee News as a Preferred Source

பின்னணி என்ன?

கடைசியாக பிப்ரவரி 2024ல் விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், அதன் பிறகு டெஸ்ட் அணியில் இடம்பெறவில்லை. காயம் மற்றும் ஃபார்ம் அவுட் காரணமாக அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில், இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அவர் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த தொடர், அக்டோபர் 2ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.

பிசிசிஐயின் அறிவிப்பு

சமீபத்தில், பிசிசிஐயின் தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர், ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா A அணியை அறிவித்தார். இந்த தொடர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெறும் அதே காலகட்டத்தில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்தியா A அணியில், ஷ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறவில்லை. ராஜத் படிதார் மற்றும் திலக் வர்மா ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய ஒருநாள் அணியில் ஒரு முக்கிய வீரராக இருப்பதால், அவர் A அணியின் ஒருநாள் தொடரில் இடம் பெறாதது, அவர் சீனியர் டெஸ்ட் அணியில் இடம் பெறலாம் என்பதற்கான ஒரு முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதே சமயம், அக்டோபர் 1ம் தேதி தொடங்கும் இரானி கோப்பை போட்டியில், ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு, ருதுராஜ் கெய்க்வாட் ரெஸ்ட் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியா A ஆகிய இரண்டு அணிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

அறிமுகப் போட்டியிலேயே சதம்

30 வயதான ஷ்ரேயாஸ் ஐயர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த ஒரு சில இந்திய வீரர்களில் ஒருவர் என்ற பெருமைக்குரியவர். இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 36.9 சராசரியுடன் 811 ரன்கள் குவித்துள்ளார். அவரது அனுபவமும், அதிரடி ஆட்டமும், இந்திய மிடில்-ஆர்டருக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் மிடில் ஆர்டர் அவ்வளவு சிறப்பாக இல்லை என்றால் மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயரை டெஸ்ட் அணியில் சேர்க்க பிசிசிஐ தீர்மானித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி, இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.