ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை லீக் 8 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இந்த சூழலில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய – பாகிஸ்தான் போட்டி 13ஆம் தேதி நடைபெற்ற நிலையில், பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் எதிர்கொண்ட பரிதாப பின்னாலையும், அதன்பின் ஏற்பட்ட ‘கைகுலுக்கல் சர்ச்சையும்’ கிரிக்கெட் உலகில் பரபரப்பான விவாதங்களுக்காகி உள்ளது. தற்போது பாகிஸ்தான் அணி யுஏஇ அணிக்கு எதிரான போட்டியை புறகணித்து தொடரை விட்டு வெளியேறும் முடிவையே எடுத்துள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, அணியின் மோசமான ஆட்டத்தை விமர்சித்து, குறிப்பாக தனது மருமகனான ஷஹீன் அஃப்ரிடியை கடுமையாக சாடி உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்டிங் வரிசையை 127 ரன்னில் முறியடித்தனர். பின்னர் இந்திய அணி 15.5 ஓவர்களில் இலக்கை அடைந்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. பாகிஸ்தானின் பேட்டிங் சரிந்த போதிலும், ஷஹீன் அஃப்ரிடி 16 பந்துகளில் 33 ரன்களை ஈட்டினார். பாகிஸ்தான் அணி 100 ரன்னைக் கடக்க முதன்மை பங்களிப்பு இவரிடம் இருந்திருந்தாலும், ஷாஹித் அஃப்ரிடி, தனது மருமகனின் பந்துவீச்சு திறனில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஷாஹித் அஃப்ரிடி, “ஷஹீன் சில ரன்களை அடித்தாலும் பந்துவீச்சில் கோட்டைவிட்டுவிட்டார். எனக்கு ரன்கள் தேவையில்லை, பந்துவீச்சுதான் வேண்டும். ஷஹீன் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி புதிய பந்துகளை ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுத்தால் தான் அணி வெற்றி பெறும். மனரீதியாக அவர் பலமாக இருக்க வேண்டும்” என்று அவர் நேரடியாக அறிவுறுத்தினார்.
ஷாஹித் அஃப்ரிடி, பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை ‘மூன்றாம் தரத்தில்’ உள்ளது என்று கடுமையாக விமர்சித்தார். “உள்நாட்டுத் தரத்தில் முதலீடு செய்து வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு தயாராக மாற்றவேண்டும்” என்றார்.
உலகம் முழுவதும் கைகுலுக்கல் சர்ச்சையைப் பேசிக்கொண்டிருக்கும் போது, ஷாஹித் அஃப்ரிடி தனது அணியின் அடிப்படையிலான திறமையின்மை மற்றும் நிர்வாக சிக்கல்கள் குறித்து பெருமளவு விமர்சனங்களை முன்வைத்தார். இதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் ஆழமான பிரச்சினைகள் வெளி வந்துள்ளன என்பது தெளிவாகத் தெரிய வருகிறது.
பாகிஸ்தான் அணி அடுத்த போட்டியாக நாளை (செப்டம்பர் 17) யுஏஇ அணியை எதிர்கொள்ள இருக்கிறது. ஆனால் இந்திய அணியுடன் விளையாடியதால் ஏற்பட்ட சர்ச்சையால், அவர்கள் அப்போட்டியை புறக்கணிக்க இருப்பதாக முடிவு செய்துள்ளனர். அதாவது இந்தியாவுடனான போட்டியின்போது, நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் இரு அணிகளும் கைக்குலுக்க வேண்டாம் என கூறியதால், நடுவரை இத்தொடரில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் இருந்து விலகுவோம் என தெரிவித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். யுஏஇ அணிக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால், தொடரைவிட்டு வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
About the Author
R Balaji