India vs Pakistan Asia Cup 2025: துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த ஆசிய கோப்பை 2025 தொடரின் முதல் போட்டியில், இந்தியா பாகிஸ்தானை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இது வெறும் ஒரு கிரிக்கெட் போட்டியாக மட்டும் இருக்கவில்லை, இரு நாடுகளுக்கு இடையே அரசியல் சர்ச்சைகளுக்கும் வழிவகுத்தது. மேலும், இரு அணி பிளேயர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் மற்றும் ரசிகர்களின் கொந்தளிப்பு உணர்வு என அனைத்தும் கலந்த ஒரு உணர்ச்சிகரமான மோதலாக மாறியது. இருப்பினும் இந்த போட்டியுடன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதல்கள் முடிந்துவிடவில்லை, இந்தத் தொடரில் இன்னும் இரண்டு முறை இந்த அணிகள் நேருக்கு நேர் மோத வாய்ப்புள்ளது.
Add Zee News as a Preferred Source
மீண்டும் ஒரு மோதலுக்கு வழிவகுக்கும் சூப்பர் ஃபோர் சுற்று
இந்தியா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம், ‘A’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்து சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அதே சமயம், பாகிஸ்தான் தனது அடுத்த போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தினால், ‘A2’ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெறும். இது நடந்தால், கிரிக்கெட் ரசிகர்கள் மீண்டும் ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டியை செப்டம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை அன்று காண முடியும்.
இறுதிப் போட்டியில் மீண்டும் ஒரு மோதல்?
இந்த இரண்டு அணிகளும் சூப்பர் ஃபோர் சுற்றில் சிறப்பாகச் செயல்பட்டு, புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தால், ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியிலும் ஒருவரை ஒருவர் சந்திப்பார்கள். இந்த இறுதிப் போட்டி செப்டம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். ஒருவேளை இது நடந்தால், இந்த ஆசிய கோப்பை தொடர் வரலாற்றில் இப்போட்டி ஒரு சரித்திரமாக மாறும்.ஏனென்றால் இத்தனை ஆண்டு கால ஆசியகோப்பை வரலாற்றில் ஒருமுறை கூட இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதியதில்லை.
முதல் போட்டியில் நடந்த சர்ச்சைகள்
முதல் போட்டியில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றவுடன் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். இது கிரிக்கெட் களத்தில் பெரும் சர்ச்சையையாக வெடித்தது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் எந்தளவுக்கு அரசியல் பதட்டம் இருக்கிறது என்பதை காட்டுவதாக அமைந்தது. இந்திய அணியின் இந்த முடிவுக்கு, பாகிஸ்தான் அணி மற்றும் தலைமை பயிற்சியாளர் அதிருப்தி தெரிவித்தனர். இது களத்திற்கு வெளியே சர்ச்சைகளை உருவாக்கியது.
ஆனால், களத்தில் இந்திய அணியின் ஆட்டம் ஆக்ரோஷமாக இருந்தது. ஹர்திக் பாண்டியா, பும்ரா, அக்சர் படேல், மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு, பாகிஸ்தானை வெறும் 127 ரன்களுக்கு சுருட்டியது. பின்னர், சூர்யகுமார் யாதவ் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரின் சிறப்பான பேட்டிங், இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தது.
இப்போது, ரசிகர்களின் கவனம் முழுவதும் அடுத்து வரவிருக்கும் போட்டிகள் மீது திரும்பியுள்ளது. அரசியல் மோதல்களுக்கு மத்தியில், இந்த இரு அணிகளும் மீண்டும் மீண்டும் மோதுவது இந்த தொடரின் பரபரப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆசிய கோப்பை, மேலும் இரண்டு உணர்ச்சிகரமான இந்தியா-பாகிஸ்தான் மோதல்களை நமக்கு வழங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About the Author
S.Karthikeyan