சூரத்,
பிரதமர் மோடியின் பிறந்த நாள் செப்டம்பர் 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீல் பேசும்போது, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வெவ்வேறு வகையான சேவை பணிகள் தொடங்கி வைக்கப்படும்.
அக்டோபர் 2-ந்தேதி மகாத்மா காந்தியின் பிறந்த தினமும், செப்டம்பர் 25-ல் தீனதயாளின் பிறந்த தினமும் வருகிறது. இந்த காலகட்டத்தில், கட்சியால் குஜராத்திலும் மற்றும் நாடு முழுவதும் பல்வேறு வகையான திட்டங்கள் நடத்தப்படும்.
நாட்டில் தூய்மையான நகராக முதன்முறையாக சூரத் நகரம் விருது பெற்றுள்ளது. இதற்காக, எங்களை வழிநடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அவருடைய பிறந்த நாளான செப்டம்பர் 17-ல் சூரத் நகரில் இந்த முறை, நகரிலுள்ள 6 ஆயிரம் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் திட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.