புர்ஜ் கலிபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடி படம்

துபாய்,

பிரதமர் மோடி நேற்று தனது 75-வது வயதை நிறைவு செய்தார். இவரது பிறந்த நாளையொட்டி உள்நாட்டு தலைவர்கள், உலக தலைவர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர்.ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இங்கிலாந்து மன்னர் சார்லஸ், மோடிக்கு மரக்கன்றை பரிசாக அனுப்பியுள்ளார்.

மேலும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ், டொமினிகா பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட், பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, இலங்கை ஜனாதிபதி திசநாயக, மைக்ரோ சாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளிட்ட பலர் பிரதமர் மோடிக்கு தொலைபேசியிலும், வீடியோ மற்றும் எக்ஸ் தள பதிவு வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.இதுபோல மேலும் பல்வேறு தலைவர்கள் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், உள்துறை மந்திரி அமித்ஷா மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதேபோல் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்தநிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் புர்ஜ் கலிபாவில் பிரதமர் நரேந்திர மோடியை கவுரவவிக்கும் விதமாக, அவரது புகைப்படத்தை ஒளிரச் செய்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான தூதரக ரீதியிலான உறவு மேம்பட்டு வரும் சூழலில், பிரதமர் மோடியை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது. முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் பகிர்ந்த வாழ்த்து செய்தியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழவும், இந்தியாவின் முன்னேற்றத்தையும் மக்களின் செழிப்பையும் முன்னேற்றுவதில் தொடர்ந்து வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.