வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ந்தேதி டிரம்ப் பொறுப்பேற்று கொண்ட பிறகு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அரசாங்க செலவினங்களை குறைப்பதற்காக எலான் மஸ்க் தலைமையில் புதிய துறையை உருவாக்கினார். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அமெரிக்காவின் பொற்காலம் மீட்கப்படும் வகையிலான நடவடிக்கையை எடுப்பேன் என தெரிவித்த அவர், சீனா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி உத்தரவிட்டார்.
இதேபோன்று, அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் 30 நாட்களுக்கு மேல் தங்கினால் அவர்கள் அரசிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறையையும் அறிமுகப்படுத்தினார். சட்டவிரோத குடியேறிகளை ராணுவ விமானம் உதவியுடன் அவர்களுடைய சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பினார்.
இதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இந்தியாவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியுடன் கடந்த ஆகஸ்டு 27-ந்தேதி, கூடுதலாக 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்து அமல்படுத்தினார்.
இதனால், இந்திய ஏற்றுமதி சந்தை ஜூன் தொடங்கி ஆகஸ்டு வரையிலான 3 மாதங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான அறிவிப்பு ஒன்றை டிரம்ப் வெளியிட்டு உள்ளார்.
1 லட்சம் டாலர்
இதன்படி, எச்1-பி விசாக்களுக்கான கட்டணம் ரூ.88 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடி (1 லட்சம் டாலர்) அளவுக்கு உயர்த்தப்படுகிறது. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில், வர்த்தக மந்திரி ஹோவார்டு லுட்னிக் முன்னிலையில் இதற்கான அறிவிப்பில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
இதன்பின்பு அவர் கூறும்போது, எங்களுக்கு பணியாளர்கள் தேவை. அதிலும், எங்களுக்கு சிறந்த பணியாளர்கள் தேவை. அதனை இந்த அறிவிப்பு உறுதி செய்யும். அதுவே நடக்க போகிறது. அமெரிக்க பணியாளர்களை நீக்காமல், அதே வேளையில், உண்மையில் மிக திறன் வாய்ந்த நபர்களை நாட்டுக்குள் கொண்டு வருவது உறுதி செய்யப்படும் நோக்கத்தில் இந்த கட்டணம் இருக்கும் என்றார்.
கட்டண முறை
அமெரிக்கர்களிடம் இருந்து வேலைவாய்ப்புகளை பறிக்க முயற்சிப்பதற்கு பதிலாக, இந்த நடவடிக்கை அமையும். இதனால், அமெரிக்க கஜானாவில், கோடிக்கணக்கில் நிதி வந்து சேரும். இந்த நிதியை வரி குறைப்புக்கு நாங்கள்பயன்படுத்தி கொள்வோம். கடன்களையும் அடைப்போம். அது வெற்றியடையும் என நாங்கள் நினைக்கிறோம் என்று கூறினார்.
இந்த கட்டணம் ஆண்டுக்கு ஒரு முறை என்ற கணக்கில் வசூலிக்கப்படும். இந்த விசாக்கள் 3 ஆண்டுகள் செல்லுபடியாக கூடியவை. அதன்பின்னர், அவற்றை 3 ஆண்டுகளுக்கு புதுப்பித்து கொள்ள முடியும்.
தங்க அட்டை
இதேபோன்று தங்க அட்டை எனப்படும் கோல்டு கார்டு திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்துவதற்கான அறிவிப்பில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். இது, மிக சிறந்த திறன் படைத்த வெளிநாட்டுக்காரர்களுக்கானது.
அவர்கள் அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க கஜானாவுக்கு ரூ.8 கோடியே 88 லட்சத்து 91 ஆயிரம் (1 மில்லியன்) செலுத்த கூடிய தனி நபர்களுக்கானது. அல்லது அவர்களுக்காக ஒரு நிறுவனம் ரூ.176 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரம் (2 மில்லியன்) கொடுக்க முன்வர வேண்டும்.
இதன் பலன் என்னவென்றால், அவர்களுக்கு விசா வழங்கும் பணி விரைவுப்படுத்தப்படும். கிரீன் கார்டும் விரைவில் கிடைக்கும்.
யாருக்கு கட்டணம்?
எனினும், எச்1-பி விசாவை முன்பே வைத்திருப்பவர்களுக்கும் இந்த கட்டணம் உண்டா? அல்லது புதுப்பிப்பவர்களுக்கு மட்டுமே உண்டா? அல்லது வெளிநாட்டில் இருந்து முதன்முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கு இந்த கட்டணம் உண்டா? என கேட்டதற்கு பதிலளித்த லுட்னிக், புதுப்பிப்பவர்களுக்கோ அல்லது முதன்முறையாக விண்ணப்பிப்பவர்களுக்கோ, அதனை நிறுவனமே முடிவு செய்ய வேண்டும்.
அரசுக்கு இந்த தொகையை செலுத்தும் அளவுக்கு அந்த நபர் மதிப்புடையவரா? அல்லது அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டு அமெரிக்கர் ஒருவரை இந்த பணியில் அமர்த்தலாம் என்பன போன்ற விசயங்களை நிறுவனங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
ஜனாதிபதி மிக தெளிவாக இருக்கிறார். அமெரிக்காவுக்கு மதிப்புமிக்க நபர்களே வேண்டும். இதனால், இந்த விசாக்களை பயன்படுத்தி அனைத்து மக்களும் வந்து செல்ல கூடிய ஒரு முட்டாள்தனம் இனி நிறுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இந்திய பணியாளர்களின் நிலை
வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்தும் முடிவால், தொழில்நுட்ப தலைமை செயல் அதிகாரிகள் வருத்தத்தில் உள்ளனரா? என கேட்டதற்கு பதிலளித்த டிரம்ப், அனைவரும் மகிழ்ச்சியடைய போகிறார்கள். நாங்களும் எங்களுடைய நாட்டில், ஆக்கப்பூர்வ மக்களை கொண்டிருக்க போகிறோம்.
அதற்காக இந்த நிறுவனங்கள் நிறைய தொகையை கொடுக்க இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் அதிக மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள் என்று பதிலளித்து உள்ளார்.
எனினும், இதன் எதிரொலியாக இந்திய தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் ஏற்கனவே பல ஆண்டுகளாக உழைத்து, ஆனால், கிரீன் கார்டு கிடைக்காமல் பணியில் உள்ள இந்தியர்களுக்கு இனி விசாவை நீட்டிப்பதில், சிக்கல்கள் ஏற்படும்.
அவர்கள் அமெரிக்காவிலேயே தொடர்ந்து பணியில் இருப்பதா? அல்லது சொந்த நாட்டுக்கு திரும்பி விடுவதா? என்பது நிறுவனங்களின் முடிவுக்கு சென்று விடும். விசா கிடைப்பது, அதனை நீட்டிப்பது ஆகியவற்றில் பல சிக்கல்கள் உண்டாகி இந்திய தொழிலாளர்களுக்கு பெரும் பாதகம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
1990-ம் ஆண்டு முதல் வெளிநாடுகளை சேர்ந்த பணியாளர்களுக்கு எச்1பி விசா வழங்கும் நடைமுறை உள்ளது. இந்நிலையில், இதன் நடைமுறைகளில் ஏற்படுத்தப்பட்டு உள்ள மாற்றங்களால், பல தொழிலாளர்கள் வேலை இழக்க கூடிய சூழலும் காணப்படுகிறது. தகுதி வாய்ந்த நபர்களை நிறுவனங்கள் தக்க வைக்க முயற்சிக்கும்.
அப்படி திறமையில்லாத மற்ற நபர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பம் நிலை ஏற்படும். ஏற்கனவே, 71 சதவீத இந்தியர்கள் இந்த விசாவை பெறுவதற்காக வேண்டி, விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனால், அவர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.