அபுதாபி,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 56 ரன்கள் அடித்தார். ஓமன் தரப்பில் ஷா பைசல், ஜிதன் ராமநந்தி, ஆமிர் கலீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றது. ஓமன் அணியில் அதிகபட்சமாக ஆமீர் கலீம் 64 ரன்களும், ஹம்மது மிர்சா 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஹர்திக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், “ஓமன் அற்புதமாக விளையாடியது என்று நினைக்கிறேன். அவர்களின் பயிற்சியாளராக சுலு சார் (சுலக்ஷன் குல்கர்ணி) இருப்பதால் கடுமையான போட்டி மனப்பான்மை இருக்கும் என்று தெரியும். அவர்கள் பேட்டிங் செய்ததை பார்த்து மிகவும் ரசித்தேன். இங்கு மிகவும் ஈரப்பதமாக இருக்கிறது. அவர் (ஹர்திக் பாண்ட்யா) அவுட் ஆனது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அவரை விளையாட்டில் இருந்து விலக்கி வைக்க முடியாது. சூப்பர்4 சுற்றுக்கு எல்லாமே தயார்” என்று கூறினார்.