அபுதாபி,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா – ஓமன் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 56 ரன்கள் அடித்தார். ஓமன் தரப்பில் ஷா பைசல், ஜிதன் ராமநந்தி, ஆமிர் கலீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றது. ஓமன் அணியில் அதிகபட்சமாக ஆமீர் கலீம் 64 ரன்களும், ஹம்மது மிர்சா 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஹர்திக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் ஆட்ட நாயகன் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டியில், “இங்கே ஈரப்பதமும் வெப்பமும் அதிகமாக இருந்தது. அதை சமாளிக்க கடந்த சில வாரங்களாக என் உடற்தகுதியில் வேலை செய்து வருகிறேன். நாங்கள் ஒரு புதிய பயிற்சியாளரை அழைத்துக்கொண்டு பிராங்கோ சோதனையை நடத்தினோம். களத்தில் சிறிது நேரம் செலவிட முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர்கள் (ஓமன்) மிகவும் சிறப்பாக பந்து வீசினர். ஓமனுக்கு பாராட்டு கொடுக்க வேண்டும். பவர்பிளேயிலும் நன்றாக பந்து வீசினர். நான் எப்போதும் நேர்மறையாக இருக்க என் பலத்தை ஆதரிக்கிறேன். நாட்டிற்காக பேட்டிங்கில் ஏதேனும் பங்களிப்பு செய்தால், அதில் உள்ள நேர்மறையானவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.