அபுதாபி,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 12-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா, ஓமனுடன் (ஏ பிரிவு) மோதியது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சாம்சன் 56 ரன்கள் அடித்தார். ஓமன் தரப்பில் ஷா பைசல், ஜிதன் ராமநந்தி, ஆமிர் கலீம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் தொடர்ந்து 3-வது வெற்றியை பெற்றது. ஓமன் அணியில் அதிகபட்சமாக ஆமிர் கலீம் 64 ரன்களும், ஹம்மது மிர்சா 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஹர்திக், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்த ஆமிர் கலீமுக்கு வயது 43 வருடங்கள் மற்றும் 303 நாட்கள். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 3 வடிவிலான போட்டிகளையும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சேர்த்து இந்தியாவுக்கு எதிராக அதிக வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை ஆமிர் கலீம் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு, 1946-ம் ஆண்டு, இங்கிலாந்து முன்னாள் வீரர் வாலி ஹேமண்ட், தனது 43 வயது 31 நாட்களில் இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் 69 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது, 43 வயது 303 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தி, ஆமிர் கலீம் புதிய வரலாறு படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ஆமிர் கலீம் – 43 வயது 303 நாட்கள்
2. வாலி ஹேமண்ட் – 43 வயது 31 நாட்கள்
3. பாப் சிம்ப்சன் – 41 வயது 359 நாட்கள்