அபுஜா,
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வணிக தலைநகரம் லாகோஸ். அங்குள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஆப்ரிலேண்ட் டவர் என்ற வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தின் 4-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தன.
எனவே அங்கிருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து வணிக வளாகத்தின் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பலரும் தப்பிக்க முயன்றனர். இதில் பலருக்கு கை, கால்கள் முறிந்தன.
இதற்கிடையே தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்றதும் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். அவர்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மற்றொருபுறம் வணிக வளாகத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் 10 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 25 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் பலியானோருக்கு அதிபர் போலா டினுபு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், இன்வெர்ட்டர் பேட்டரி வைத்திருந்த அறையில் மோசமான பராமரிப்பு மற்றும் போதிய காற்றோட்டம் இல்லாததே இதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.