மும்பை,
நாட்டிலேயே மும்பையில்தான் செம்பூர் – சந்த்கட்கே மகாராஜ் சவுக் (சாத் ரஸ்தா) இடையே 19.74 கி.மீ.க்கு மோனோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பழுதாகி நடுவழியில் நிற்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த மாதம் 19-ந் தேதி பலத்த மழையின் போது மைசூர்காலனி அருகில் மோனோ ரெயில் பழுதாகி அந்தரத்தில் நின்றது. அப்போது ரெயிலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தானியங்கி கதவுகளை திறக்க முடியவில்லை. இதனால் அதில் சிக்கிய 582 பயணிகள் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கதவுகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.
அதேபோல, கடந்த 15-ந்தேதி வடலா பகுதியில் அண்டாப்ஹில் பஸ் டெப்போ – ஜி.டி.பி.என். நிலையம் இடையே மோனோ ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயில் நடுவழியில் அந்தரத்தில் நின்றது. இதனால் அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். நடுவழியில் ரெயில் அந்தரத்தில் நின்றதால் செய்வது அறியாது திகைத்தனர்.
இதையடுத்து, பயணிகளை மீட்பதற்காக மற்றொரு மோனோ ரெயில் வரவழைக்கப்பட்டது. அந்த ரெயில் பழுதாகி நின்ற மோனோ ரெயில் அருகில் நிறுத்தப்பட்டது. இரு ரெயில்களின் வாசல்களுக்கும் இடையே பலகை மூலம் பாதை உருவாக்கப்பட்டு, பயணிகள் மீட்பு ரெயிலில் பத்திரமாக ஏற்றப்பட்டனர். பின்னர் அவர்கள் அருகில் உள்ள ரெயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
இந்த நிலையில், மோனோ ரெயிலில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் நோக்கில், அதன் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நீண்டகால நம்பகத்தன்மையை உறுதிசெய்வதற்காகவும் செம்பூரில் இருந்து சாத் ரஸ்தா வரையிலான 19.54 கி.மீ தூர மோனோ ரெயில் சேவை இன்று முதல் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. மோனோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டதால் மாற்று போக்குவரத்தைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.