பாலஸ்தீனம் மீது இரண்டாண்டுகளாக இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை `இனப்படுகொலை’ எனக் குறிப்பிடும் இந்தப் போரில் இதுவரை 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இதில் குழந்தைகள் மட்டும் 19,000-க்கும் மேல் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
மருத்துவமனைகள், பள்ளிகள் என மக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் கட்டிடங்களை இஸ்ரேல் படையினர் குறிவைத்துத் தாக்குகின்றனர்.

உலகின் பல முனைகளிலிருந்து காஸாவுக்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டாலும் இஸ்ரேல் படையினரால் அது காஸா எல்லையிலேயே தடுக்கப்படுகிறது.
இதனால் காஸா முழுவதும் பட்டினியால் வாடுகிறது. ஐ.நா காஸாவை பஞ்சப் பகுதியாக அறிவித்திருக்கிறது.
இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலை நிறுத்துமாறு ஐநா சபையில் எத்தனை வாக்களித்தாலும், இஸ்ரேலின் கரங்களில் தனது ஆயுதங்களால் போரை நீட்டித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி போர் நிறுத்தத் தீர்மானத்தைத் தொடர்ச்சியாகத் தோற்கடித்து வருகிறது.
இந்த நிலையில் எழுத்தாளர் வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “இஸ்ரேல் எங்கிருக்கிறது? தெரிய வேண்டியதில்லை அது இருக்கிறது என்று தெரிந்தால் போதும்; ஓர் இனத்தை அழிக்கிறது என்று தெரிந்தால் போதும்.
உலகப்படத்தில் பாலஸ்தீனம் எங்கிருக்கிறது? தெரியவேண்டியதில்லை அது இருந்தும் இல்லாமல் இருக்கிறது என்று தெரிந்தால் போதும்.
65 ஆயிரம் மனிதர்களின் உடல் உடைக்கப்பட்டு உயிர் உருவப்பட்டிருக்கிறது. செய்துமுடிக்கப்பட்ட ஒரு செயற்கைப் பஞ்சத்தால் நர மாமிசம் உண்ணக்கூடப் பல உடல்களில் சதைகள் இல்லை.

முளைக்குச்சியில் குத்திவைக்கப்பட்ட மண்டை ஓடுகளாய்க் குழந்தைகள்… குழந்தைகள்… மனிதாபிமானமுள்ள யாருக்கும் மனம் பதறவே செய்யும்.
பாலைவனத்து மணலை அள்ளி வாயில் போட்டு மெல்லும் ஒரு சிறுவனைப் பார்த்து நாற்காலிவிட்டு நகர்ந்து எழுந்தேன்; தாங்க முடியவில்லை. இந்த இனத் துயரம் முடிய வேண்டும்.
இஸ்ரேல் எங்கிருக்கிறது?
தெரிய வேண்டியதில்லை
அது இருக்கிறது
என்று தெரிந்தால் போதும்;
ஓர் இனத்தை அழிக்கிறது
என்று தெரிந்தால் போதும்உலகப்படத்தில்
பாலஸ்தீனம் எங்கிருக்கிறது?
தெரியவேண்டியதில்லை
அது இருந்தும்
இல்லாமல் இருக்கிறது என்று
தெரிந்தால் போதும்65ஆயிரம் மனிதர்களின்
உடல்… pic.twitter.com/4fO84nIGYp— வைரமுத்து (@Vairamuthu) September 21, 2025
நாளை நிகழ்வதாக அறியப்படும் ஐ.நாவின் எண்பதாம் அமர்வில் இந்த நிர்மூலம் நிறுத்தப்பட வேண்டும்; உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்; அமெரிக்கா வீட்டோ அதிகாரத்துக்கு விடுமுறை விடவேண்டும்.
மிஸ்டர் நெதன்யாகு கழற்றிவைத்த இதயத்தை எடுத்து இருந்த இடத்தில் அணிந்துகொள்ளுங்கள்.
இது இந்தியாவின் தெற்கிலிருந்து ஈரல் நடுங்கும் ஒரு மனிதனின் ஈரக் குரல்” என்று பதிவிட்டிருக்கிறார்.