இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி, கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த மறுபிரவேசம், வங்காள கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் 94வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் சங்கத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Add Zee News as a Preferred Source
இதற்கு முன்பு 2015 முதல் 2019 வரை அவர் இந்த பதவியை வகித்துள்ளார். பின்னர் 2019 முதல் 2022 வரை பிசிசிஐ தலைவராக பணியாற்றினார். தற்போது, அவரது மூத்த சகோதரர் ஸ்நேஹாசிஷ் கங்குலியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, கங்குலி மீண்டும் இந்த பொறுப்பை ஏற்றுள்ளார்.
கங்குலியின் முக்கிய திட்டங்கள்
மீண்டும் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி தனது பதவிக்காலத்திற்கான முக்கிய திட்டங்கள் குறித்து விளக்கினார். கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தின் ரசிகர்கள் உட்காரும் எண்ணிக்கையை மீண்டும் ஒரு லட்சமாக உயர்த்துவது தனது முக்கிய பணிகளில் ஒன்று என்று அவர் கூறினார். தற்போது 68,000 ஆக உள்ள இந்த எண்ணிக்கை, 2026 டி20 உலக கோப்பைக்கு பிறகு அதிகரிக்கப்படும் என தெரிவித்தார். நவம்பர் மாதம் உலக சாம்பியனான தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஈடன் கார்டனில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியை வெற்றிகரமாக நடத்துவது தனது உடனடி பணி என்று கங்குலி குறிப்பிட்டார்.
2019ல் நடந்த வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு பிறகு, இங்கு நடைபெறும் முதல் டெஸ்ட் இதுவாகும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையின் முக்கிய போட்டிகளை, குறிப்பாக அரையிறுதி போட்டியை ஈடன் கார்டனில் நடத்துவதற்கு, புதிய பிசிசிஐ நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். ஹவுராவில் உள்ள துமுர்ஜலாவில் 9 ஏக்கர் நிலப்பரப்பில், அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கிரிக்கெட் அகாடமி அமைக்கப்படும். இது, மாநிலத்தின் கிரிக்கெட் திறமைகளை வளர்க்க உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். மாநில மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கங்களுக்கான மேம்பாட்டு நிதி, ரூ.5 கோடியிலிருந்து ரூ.8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
யார் யாருக்கு பொறுப்பு?
கங்குலியுடன், பாப்லு கோலே (செயலாளர்), மதன் மோகன் கோஷ் (இணை செயலாளர்), சஞ்சய் தாஸ் (பொருளாளர்) மற்றும் அனு தத்தா (துணைத் தலைவர்) ஆகியோர் அடங்கிய முழு குழுவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது. கங்குலியின் இந்த மறுவருகை, வங்காள கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பையும், வீரர்களின் திறனையும் மேம்படுத்தும் என கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
About the Author
RK Spark