கீவ்,
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே மூன்றாண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும், இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்தியாவும் தொடர்ச்சியாக கூறி வருகிறது. இந்த யுகம் போருக்கானது அல்ல என்றும், உலகில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் பல சந்தர்ப்பங்களில் இந்தியா கூறியுள்ளது.
உக்ரைன் – ரஷியா போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கும் நிலையில்,உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஜெலென்ஸ்கி கூறுகையில், “சீனா போன்று இந்தியா ரஷியா பக்கம் இல்லை; இந்தியா பெரும்பாலும் நமது பக்கமே உள்ளது. எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் முரண்பாடுகள் இருந்தாலும், அவற்றை சமாளிக்க முடியும். இந்தியாவுடனான உறவை ஐரோப்பா வலுப்படுத்த வேண்டும். இந்தியாவை தன் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு இந்தியா மற்றும் சீனா உதவுகிறதா என்ற கேள்விக்கு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.