லடாக்,
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லடாக்கில் உள்ள லே உச்ச அமைப்பினர்(Leh Apex Body LAB) கடந்த 10-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று லடாக்கில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே நேரத்தில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் அங்கு பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.