Asia Cup 2025, Team India: ஆசிய கோப்பை 2025 தொடர் கடந்த செப். 9ஆம் தேதி தொடங்கியது. வரும் செப். 28ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணி முதல் அணியாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. இலங்கை அணி சூப்பர் 4 சுற்றில் முதல் அணியாக வெளியேறிவிட்டது.
Add Zee News as a Preferred Source
Pakistan vs Bangladesh: இன்றைய போட்டி முக்கியம்
சூப்பர் 4 சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன. இன்று வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணியே இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் எனலாம். வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கையை தோற்கடித்திருந்த நிலையில், இந்தியாவிடம் தோற்றன. இதனால், இன்றைய போட்டி இரு தரப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Team India: இந்த மாற்றத்தை செய்யும் இந்திய அணி?
இந்திய அணியை பொருத்தவரை, வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிக சுமாராகவே விளையாடியிருந்தது. அபிஷேக் சர்மா – கில் ஜோடி அதிரடி ஓபனிங்கை கொடுத்தும், பேட்டிங் ஆர்டரில் செய்த பல்வேறு மாற்றங்களால் இந்திய அணி சறுக்கலை சந்தித்தது. பந்துவீச்சிலும் இன்னும் ஒரு கூடுதல் பிரீமியம் பந்துவீச்சாளரை எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை இந்த போட்டி வெளிக்காட்டி உள்ளது.
அக்சர் பட்டேல் பெரியளவில் சோபிக்காததால் அவருக்கு பதில் அர்ஷ்தீப் சிங்கை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம். இதனால் நம்பர் 7 வரை பேட்டர் இருப்பார்கள், 4 பிரீமியம் பந்துவீச்சாளர்களும் கிடைப்பார்கள். அர்ஷ்தீப் உள்ளே வந்தால் இந்திய அணியின் பவர்பிளே பந்துவீச்சு மற்றும் டெத் ஓவர் பந்துவீச்சு இரண்டும் மேம்படும். இதனால் பும்ராவும் பவர்பிளேவில் மூன்று ஓவர்களை வீச வேண்டியதும் இல்லை.
இந்த மாற்றத்தை இந்திய அணி கண்டிப்பாக செய்யாது என பலரும் ஆணித்தரமாக கூறுகிறார்கள். இறுதிப்போட்டியில் இதை முயற்சிப்பதை விட, நாளை (செப். 26) நடைபெறும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலாவது இந்திய அணி இந்த மாற்றத்தை முயற்சித்து பார்க்க வேண்டும். சூர்யகுமார் யாதவ் மற்றும் கௌதம் கம்பீர் இதுகுறித்து கலந்தாலோசிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
Team India: பேட்டிங் வராத சஞ்சு சாம்சன்
அதேநேரத்தில், நேற்று சஞ்சு சாம்சன் கடைசி வரை பேட்டிங் கொண்டுவரப்படாதது பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த தொடருக்கு முன் ஓபனிங்கில் விளையாடி வந்த சஞ்சு சாம்சன், தற்போது மிடில் ஆர்டரிலும் இல்லாமல் கீழ் வரிசையில் இருக்கிறார். இந்த தொடரிலேயே அவர் நிலையான ஸ்பாட்டில் விளையாடவில்லை. சுப்மான் கில் ஆட்டமிழந்து, அபிஷேக் களத்தில் இருக்கும்போது நம்பர் 3இல் சிவம் தூபே களமிறங்குகிறார். இடது கை ஸ்பின்னர்கள் இருப்பதால் இரண்டு முனையிலும் இடது கை பேட்டர் வேண்டுமென்பதால் தூபே களமிறக்கினார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
Team India: என்ன வியூகம்?
ஆனால் நம்பர் 5இல் ஹர்திக் பாண்டியா இறங்குகிறார், நம்பர் 6இல் திலக் வர்மா இறங்குகிறார். சரி, சஞ்சு சாம்சன் நம்பர் 7 போல என எதிர்பார்த்தால் அந்த ஸ்பாட்டில் அக்சர் பட்டேல் களமிறங்க, சஞ்சு சாம்சன் கடைசிவரை விளையாடவில்லை. சஞ்சு சாம்சனை பதுக்கிவைக்க என்ன காரணம் என்பது கம்பீருக்கும், சூர்யகுமாருக்கும்தான் வெளிச்சம். ஆனால், அவரை கடைசியில் இறக்கிவிட்டு அதிரடி காட்டலாம் என நினைத்தால் அது சரியான வியூகமாக இருக்காது என்பதை மட்டும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
Team India: எதற்கு சஞ்சு சாம்சன்?
கண்டிப்பாக அடுத்தடுத்த போட்டிகளில் சஞ்சு சாம்சன் நம்பர் 3 அல்லது நம்பர் 5இல் இறங்கலாம். அவருக்கு தொடர்ந்து வாய்ப்பும் கொடுக்கப்படலாம். ஆனால், சஞ்சு சாம்சனிடம் இருந்து முழு திறனை இந்திய அணியால் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அவரை அணியில் வைத்து என்ன பயன்?, பின்வரிசையில் சஞ்சுவுக்கு வாய்ப்பளிப்பதற்கு பதில் ஜித்தேஷ் சர்மாவுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்பதே பலரின் கூற்றாக இருக்கிறது.