சோனம் வாங்சுக்கிற்கு பாகிஸ்தான், வங்கதேச நாடுகளுடன் தொடர்பு: லடாக் டிஜிபி

லே: லடாக்கில் கைது செய்யப்பட்ட பருவநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்கிற்கு பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் வங்கதேசம் சென்று வந்ததாகவும் லடாக்கின் காவல்துறை இயக்குநர் எஸ்டி சிங் ஜம்வால் தெரிவித்தார்.

லேவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டிஜிபி எஸ்டி சிங் ஜம்வால், “செப்டம்பர் 24 அன்று ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. நான்கு பேர் உயிரிழந்தனர். ஏராளமான பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் காயமடைந்தனர். மத்திய அரசுடன் நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்க இந்த முயற்சிகள் நடந்தன.

இதில் சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்; அவர்களின் நம்பகத்தன்மையிலும் கேள்விக்குறி உள்ளது. அதில் முதன்மையான பெயர் சோனம் வாங்சுக். அவர் இதுபோன்ற கருத்துகளை வெளியிட்டு பேச்சுவார்த்தையை தடம் புரளச் செய்துள்ளார்.

அக்டோபர் 6-ம் தேதி உயர் அதிகாரக் குழு கூட்டம் மற்றும் செப்டம்பர் 25-26 தேதிகளில் முதற்கட்ட கூட்டங்களுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் செப்டம்பர் 10-ம் தேதி, அமைதியை சீர்குலைக்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் மற்றும் வீடியோக்கள் அதிகரித்தன. அவைதான் சட்டம் ஒழுங்கு சீர்குலைய காரணமானது.

செப்டம்பர் 24 அன்று, ஒரு கூட்டம் கூடியது. அதில் சமூக விரோதிகளும் இருந்தனர். 5000-6000 பேர் அரசு கட்டிடங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் அலுவலகங்களை சேதப்படுத்தினர், கற்களை வீசினர். அந்தக் கட்டிடங்களில் இருந்த எங்கள் அதிகாரிகளும் தாக்கப்பட்டனர். ஓர் அரசியல் கட்சியின் அலுவலகம் எரிக்கப்பட்டது. அதிகாரிகளில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வளவு பெரிய தாக்குதலைத் தடுக்க, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, அதில் நான்கு துரதிர்ஷ்டவசமான மரணங்கள் நிகழ்ந்தன. முதல் நாளில், 32 பேர் படுகாயமடைந்தனர். பின்னர், 80 பாதுகாப்பு அதிகாரிகளும், மக்களும் காயமடைந்ததைக் கண்டறிந்தோம். அவர்களில் ஏழு பேர் ஆபத்தான நிலையில் இருந்தனர். ஒரு பெண் சிகிச்சைக்காக டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

சோனம் வாங்சுக் பாகிஸ்தானில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார். அவர் வங்கதேசத்துக்கும் சென்றுள்ளார். எனவே, அவர் மீது ஒரு பெரிய கேள்விக்குறி உள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது” என்று அவர் கூறினார்.

மேலும், “விசாரணையின் போது, ​​மேலும் இரண்டு பேர் பிடிபட்டனர். அவர்கள் ஏதேனும் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா என விசாரிக்கிறோம். இந்த இடத்தில் நேபாள மக்கள் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர், எனவே நாங்கள் அதுகுறித்தும் விரிவாக விசாரிக்க உள்ளோம். லேவில் இரண்டு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவை தளர்த்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட வாங்சுக், ராஜஸ்தானின் ஜோத்பூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.