பெங்களுரு,
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் நரகேல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனது கணவருடன் வசித்து வந்தவர் ஹேமாவதி பிரகாஷ் கெடகேரி (வயது 34). இவர் தனது முகத்தில் கரும்புள்ளிகள் இருந்ததால் வெகு நாட்களாக விரக்தியடைந்து காணப்பட்டார். தான் அழகாக இல்லை என்று எண்ணி வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடந்துள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த ஹேமாவதி திடீரென சமையல் அறையின் வாசலில் இருந்த கம்பியில் தனது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நரேகல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, விரைந்து வந்த போலீசார் ஹேமாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.