கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

கரூர்: தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பலர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அவர்களை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மா.கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபன்னீர்செல்வம் கூறியது: ”கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தது மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவாக செய்திருக்க வேண்டும். துயரச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்புகளை முறைப்படுத்தி இருக்க வேண்டும்” என்று கூறினார்.

ஜி.கே.வாசன் கூறியதாவது: இச்சம்பவத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகத்துக்கு தீர்வு காண வேண்டும். இது அரசயில் செய்ய வேண்டிய நேரமில்லை. துயரமான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கு அதிகப்படடியான பாதுகாப்புகள் வழங்குபவர்கள். எதிர்க்கட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதில்லை.

இதுபோன்ற துயரச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நிரந்தரமாக பாதிப்பு இல்லாத வகையில் பொதுக்கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.” என்று கூறினார்.

மா.கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் கூறியதாவது: விபத்து தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையை தாமதப்படுத்தாமல் 2 வாரங்களுக்கு முடித்து உரிய நீதி வழங்க வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.