17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; 62 வயது சாமியாருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்

புதுடெல்லி,

டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சாரதா இந்திய மேலாண் மையத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர். இதன் இயக்குநரான சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (வயது 62) என்ற பார்த்தசாரதி மாணவிகளின் ஏழ்மையை அவருக்கு சாதகம் ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தி கொண்டார்.

அந்த கல்வி மையத்தின் முதுநிலை நிர்வாகத்திற்கான டிப்ளமோ படித்து வரும் 17 மாணவிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டனர். இதன்படி, சாமியார் பார்த்தசாரதிக்கு எதிராக ஆபாச பேச்சுகள், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புதல் மற்றும் உடல்ரீதியாக கட்டாயப்படுத்தி தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டார் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர்.

ஆசிரம வார்டன்கள் சிலர், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்ததுடன், அந்த சாமியாரின் வற்புறுத்தலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்படி பெண் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரும் கூட மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது என கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், சாமியாருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்பட பிற வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். இதனை டெல்லி தென்மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையாளர் அமித் கோயல் கூறினார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் உள்ள ஓட்டலில் பதுங்கியிருந்த சாமியாரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இன்று மாலை 3.40 மணியளவில் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, பல்வேறு பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், அவர்களிடம் பாலியல் விருப்பங்களை பூர்த்தி செய்து கொண்டார் என்றும் பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகள் வாக்குமூலங்களாக பதிவு செய்யப்பட்டு உள்ளன என்றும் கோர்ட்டில் வாதிடப்பட்டது.

வழக்கு விசாரணையில், அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ரவி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

ரகசிய கேமரா

சாமியார், பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்களை வைத்து மாணவிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்துள்ளார். இரவில் அவருடைய அறைக்கு வரும்படி மாணவிகளை அவர் வற்புறுத்துவார். வெளிநாட்டு பயணத்தின்போது அவருடன் வரும்படியும் வலியுறுத்துவார் என அதுபற்றிய எப்.ஐ.ஆர். தெரிவிக்கின்றது. மாணவிகளில் ஒருவருடைய பெயரை அவருடைய விருப்பத்திற்கு எதிராக மாற்றியுள்ளார் என்றும் எப்.ஐ.ஆர். தெரிவிக்கின்றது.

இந்த மையம், கர்நாடகாவின் சிருங்கேரியில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஜெகத்குரு சங்கராச்சார்யா மகாசமஸ்தானம் தட்சிணம்நயா ஸ்ரீ சாரதா பீடம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த சம்பவத்திற்கு பின்னர் சாமியாருடனான தொடர்பை சாரதா பீடம் துண்டித்துள்ளது.

முன்னாள் மாணவி ஒருவர் இந்த மையத்தின் நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், சாமியார், அந்த மையத்தில் பாலியல் ரீதியாக மாணவிகளை துன்புறுத்தி வருகிறார் என குற்றச்சாட்டாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜூலை 31-ந்தேதி இந்த கடிதம் மையத்திடம் கிடைத்துள்ளது.

அதற்கு அடுத்த நாள் விமான படையின் கல்வி இயக்குநரகத்தில் இருந்து, குரூப் கேப்டன் அந்தஸ்திலான அதிகாரி ஒருவரிடம் இருந்து அந்த மையத்திற்கு இ-மெயில் ஒன்று சென்றுள்ளது. அதில், பல்வேறு மாணவிகளும் புகார் அளித்துள்ளனர்.

விமான படை அதிகாரிகளுடைய குடும்பத்திலுள்ள பலர் இந்த மையத்தின் மாணவிகளாக இருந்துள்ளனர். இதனால், இந்த விவகாரத்தில் தலையிட்டு உள்ளது. இதனை தொடர்ந்தே போலீசை தொடர்பு கொண்டு, சாமியாருக்கு எதிராக கல்வி மையம் சார்பில் புகாரளிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட சான்றுகளையும் மையம் அனுப்பி உள்ளது.

இதற்கு முன்பும், மோசடி, நம்பிக்கைக்கு எதிராக நடந்து கொள்ளுதல் உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டார் என அந்த கல்வி மையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.