2025 ஆசிய கோப்பை தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கி நேற்று (செப்டம்பர் 28) முடிவடைந்தது. அனைவரும் எதிர்பார்க்கப்பட்டதுபோல இந்திய அணிதான் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், ஆசிய கோப்பையின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
மொத்தம் 8 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன. அதில் குரூப் சுற்றில் இருந்து சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச ஆகிய 4 அணிகள் முன்னேறின. பின்னர் இதில் இருந்து இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தேர்வாகின. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்த இரண்டு அணிகளும் இறுதி போட்டி உட்பட 3 முறை மேதின. முதலில் குரூப் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது.
கடைசியில் சொதப்பிய பாகிஸ்தான்
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி இறுதி போட்டியில் எப்படியாவது இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருந்தது. கடந்த இரண்டு போட்டிகளில் மோசமாக விளையாடிய பாகிஸ்தான் இறுதி போட்டியில் ஓரளவுக்கு சிறப்பாகவே விளையாடியது. முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 12 ஓவர்கள் வரை சிறப்பாக பேட்டிங் செய்து வந்த பாகிஸ்தான் அணி அடுத்த 8 ஓவர்கள் மிக மோசமாக விளையாடியது. அதிகபட்சமாக சாஹிப்சாதா ஃபர்ஹான் 57, ஃபக்கர் ஜமான் 46 ரன்கள் அடித்தனர். மறுபுறம் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து 147 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எளிதாக துரத்தும் என எண்ணியபோது, இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசி, அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை வீழ்த்தினர். ஆனால் அதன்பின் வந்த திலக் வர்மா சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்று சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தார்.
நடந்தது என்ன?
இந்த நிலையில்தான் சர்ச்சைகள் எழுந்தன. ஏற்கனவே கைக்குலுக்கல் சர்ச்சை வெடித்தது. தற்போது இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர் கோப்பையை பெறாமல் நிராகரித்தனர். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதால், இந்திய அணி அவரிடம் இருந்து கோப்பையை பெற மாட்டோம் என நிராகரித்தனர். கோப்பை இன்றி இந்திய அணி கொண்டாடியதை நம்மால் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, ரன்னர் அப் அதாவது இரண்டாவது இடத்திற்கான பரிசு தொகைக்கான செக்கை அங்கேயே தூக்கி எறிந்தார். இறுதி போட்டி முடிந்த பிறகு ஆசிய கவுன்சில் தலைவர் மோஷின் நக்வி, பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவை பரிசு தொகையை பெற்றுக்கொள்ள அழைத்தார். பின்னர் பரிசுத் தொகையை பெற்றுக்கொண்ட சில நொடிகளிலேயே அவர் அந்த செக்கை அவர் அங்கேயே தூக்கி எறிந்தார். இவரின் இந்த செயல் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
About the Author
R Balaji