வக்பு சட்டப் போராட்டம் குறித்து விஎச்பி கவலை: கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அரசிடம் வேண்டுகோள்

புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வக்பு சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) கவலை தெரிவித்துள்ளது.

வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மீது பல அரசியல் கட்சிகள், முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் வக்பு சட்டத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) மற்றும் பிற முஸ்லிம் அமைப்புகள் அக்டோபர் 3 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டங்கள் மீது பாஜகவின் தோழமைப் பிரிவான விஎச்பி கவலை தெரிவித்துள்ளது. இதன்மூலம், நாட்டின் அமைதி மற்றும் சமூகநல்லிணக்கங்களுக்கு அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து விஎச்பியின் சர்வதேசத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார் கூறியிருப்பதாவது: இதுபோன்ற ஆக்கிரமிப்பு போராட்டங்கள் நாட்டின் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும்.

இதுபோன்ற போராட்டங்கள் மூலம் சமூகத்தில் பதற்றத்தை பரப்ப முயற்சிக்கின்றன. இதை விட, நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் மத மற்றும் சமூக நிறுவனங்களின் நல்வாழ்வில் தீவிரமான பங்கை வகிக்க வேண்டும். வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு போராட்டங்கள் சட்டம் ஒழுங்குக்கு சவாலாக இருக்கும். இது, தேர்தலுக்கான அரசியலால் தூண்டப்பட்ட உத்தியின் ஒரு பகுதியாகத் தெரிகிறது.

இப்போராட்டங்களை உன்னிப்பாகக் கண்காணித்து, வன்முறை அல்லது சமூக விரோத நடவடிக்கைகளை சரியான நேரத்தில் தடுக்க வேண்டும். இதற்கு நாட்டின் மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். ஜிஹாதி எனும் பெயரில் வெறித்தனத்திற்கு எதிராக பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்போது, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

வக்பு சட்டம் மீதான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு இடப்பட்ட போது, ஏஐஎம்பிஎல்பி உள்ளிட்ட ஜமாத் அமைப்புகளும் அதை வரவேற்றன.ஆனால், இப்போது போராட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது, ஆச்சரியமாகவும் கவலையாகவும் உள்ளது. இந்த போராட்டங்கள் உரிய நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், நாட்டின் சமூக நல்லிணக்கம், அமைதிக்கு எதிரான கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

சமூகத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைப் பராமரிப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். இதுபோன்ற நேரங்களில் விழிப்புடன் இருப்பது அவசியம் மட்டுமல்ல, தேசபக்தியின் ஒரு பகுதியாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.