India vs Pakistan : ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. ஆனால், போட்டியின் முடிவில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் பதவியில் இருக்கும் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க இந்திய அணி மறுத்தது. நக்வி, ACC தலைவராக இருப்பதுடன், PCB தலைவராகவும் மற்றும் பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருக்கிறார். அவர் ஆசிய தொடர் முழுவதும் தனது சமூக ஊடகங்களில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைப் பகிர்ந்ததாகவும், பாகிஸ்தானின் நலனுக்காக வெளிப்படையாகப் பேசியதாகவும் குற்றம் சாட்டி, அவரின் கோப்பையை வாங்காமல் இந்தியா தவிர்த்துவிட்டது. இந்தச் சம்பவம் காரணமாகப் ஆசிய கோப்பை பரிசு வழங்கும் விழா 45 நிமிடங்கள் தாமதமானது.
Add Zee News as a Preferred Source
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிளேயர் கம்ரான் அக்மல், பாகிஸ்தான் கிரிகெட் வாரியம் உடனடியாக “நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடவே மாட்டோம்” என்று அறிவிக்க வேண்டும் என தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் ஆவேசமாக தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஐ.சி.சி (ICC) என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கலாம் என்றும் கம்ரான் அக்மல் கூறியுள்ளார். இருப்பினும், பி.சி.சி.ஐ (BCCI) தலைவரே ஐ.சி.சி-யை வழிநடத்துவதால் (ஜெய ஷா), எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடுநிலையான விசாரணை கோரிக்கை:
மற்ற கிரிக்கெட் வாரியங்கள் ஒன்றிணைந்து, இதுபோன்ற நிகழ்வுகளை கிரிக்கெட்டில் பார்க்க முடியாது என்று கூற வேண்டும் என்றும், மற்ற நாடுகள் இந்தியாவுடன் விளையாடவில்லை என்றால், பணம் ஈட்ட முடியாது என்றும் அக்மல் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த விவகாரங்களில் முடிவெடுக்க பாகிஸ்தான் மற்றும் இந்தியா அல்லாத நடுநிலை அமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து நாட்டவர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, இந்தத் தொடரில் நடந்த அனைத்து நிகழ்வுகள் குறித்தும் அவர்கள் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி மீது விமர்சனம்
ஆசியக் கோப்பை 2025 தொடர் முழுவதும் இந்தியா மோசமான நடத்தையை வெளிப்படுத்தியதாக அக்மல் குற்றம் சாட்டியுள்ளார்.இந்தியா அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டதாகவும், பாகிஸ்தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ள அவர், இந்தியாவிடமிருந்து இனி இப்படியான அணுகுமுறை தான் இருக்கும் என்பது தெளிவாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்தியா கிரிக்கெட்டுக்கு தீங்கு விளைவித்துவிட்டது, PCB மற்றும் ACC தலைவர் என்ற முறையில் நக்வி சரியான நிலைப்பாட்டை எடுத்தார் என்றும் பாராட்டியுள்ளார் அக்மல். மேலும், சில கடுமையான விமர்சனங்களையும் இந்தியா மீது அவர் வைத்துள்ளார்.
இனி இந்தியா – பாகிஸ்தான் போட்டி
இதனால், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சர்வதேச போட்டிகளில் மோதுவதும் கேள்விக்குறியாகியுள்ளது. பாகிஸ்தானில் இனி இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடவே கூடாது என்ற குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியா ஏற்கனவே அந்த நிலைப்பாட்டில் தான் இருந்து கொண்டிருக்கிறது என்பதால் இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ அதிரடி முடிவுகளை எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
About the Author
S.Karthikeyan