கரூர் விவகாரத்தில் அரசு அதிகாரிகள் விளக்கம்: பழனிசாமி சாடலும், தங்கம் தென்னரசு பதிலும்

சென்னை: “கரூர் விவகாரம் குறித்து பேசுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும் போது வருவாய் செயலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? உண்மைச் சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை அரசு அரங்கேற்றி வருகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சித்துள்ளார். இதற்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து சாடியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கரூர் துயரச் சம்பவத்துக்கு பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்துக்கான காரணத்தை பிறர் மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக தெரிகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன? ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கெனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியை தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களை பேசுவதன் அவசியம் என்ன?

இது, அந்தக் குழுவின் கருத்துகளை பாதிக்கும் வகையிலும், நீதியிலான அவமதிப்பாகவும் கருதப்பட வேண்டியதல்லவா? ஆனால், ஸ்டாலின் அரசுக்கு எந்த விதமான நெறிமுறைகளும், ஒழுக்கமும் இல்லை. அவர்களுக்கு முக்கியமானது இந்த 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்த கொடூர சம்பவத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்து கொள்வதுதான். மேலும், உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று பழனிசாமி கூறியுள்ளார்.

தங்கம் தென்னரசு பதில்: “எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கும் அறிக்கை, அவரது பதற்றத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருக்கின்றது. எவ்வகையிலாவது இந்தத் துயர்மிகு சம்பவத்திலில் இருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று துடியாய்த் துடிப்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது.

செய்தியாளர் சந்திப்பில் உண்மைகள் உணர்த்தப்படும்போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து வழக்கம் போலவே ஓர் உளறல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கரூரில் நடந்த கொடுந்துயரத்திற்குக் காரணம் என்னவென்பதை அரசு அமைத்திருக்கும் ஆணையமும் காவல் துறை விசாரணையும் முறையாக வெளிக்கொணரும் எனச் செய்தியாளர்களிடம் அரசு அதிகாரிகள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

நடைபெற்ற ஒரு பெரும் துயரச் சம்பவம் குறித்தான உண்மை நிலவரங்களை அரசின் உயர் அலுவலர்கள் நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது? அரசின் முக்கிய அங்கமாக விளங்கும் அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் அத்தகு விளக்கங்களைச் செய்தியாளர்கள் வாயிலாக வெகுமக்களுக்கும் சென்றடையச் செய்வது இத்தகுச் சூழலில் அவர்களின் கடமை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தன் வசதிக்காக மறந்துவிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.

நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு, மக்களிடம் விளக்கமளிக்காமல் ஓடி ஒளியும் அதிமுக அரசைப் போல இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் அரசு இது என்பதை எடப்பாடி பழனிச்சாமி முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் ஆதாயம் தேடுவதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதித்து நடந்துகொள்வது எதிர்க்கட்சிகளின் கடமையும் கூட என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளார்.

அரசு அதிகாரிகள் கூறியது என்ன? – முன்னதாக, தமிழக அரசின் ஊடகச் செயலரும், வருவாய்த் துறைச் செயலருமான பி.அமுதா, சட்டம் – ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சுகாதாரத் துறைச் செயலர் பி.செந்தில்குமார் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, விஜய் பிரச்சாரம் தொடர்பான வீடியோ காட்சிகளை காண்பித்து, கூட்ட நெரிசல் நிகழ்வுகளை விவரித்தனர்.

அப்போது அமுதா கூறும்போது, “கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் பகிரப்படுகின்றன. அன்று பிற்பகல் 3 மணி வரை 10,000 பேர்தான் இருந்தனர். ஆனால், விஜய் வந்த பிறகு கூட்டம் படிப்படியாக அதிகரித்து கூடுதலாக 25 ஆயிரம் பேர் கூடியிருப்பார்கள் என்று கருதுகிறோம். அவரது வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வாகனங்களில் வந்துள்ளனர்.

அன்று காலை முதலே காத்திருந்தவர்களுக்கு தண்ணீர்கூட கிடைக்கவில்லை. நீண்ட நேரம் காத்திருந்ததால் நிறைய பேருக்கு தண்ணீர் சத்து குறைவு ஏற்பட்டு சிரமப்பட்டுள்ளனர். நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு இரவு 7.40 மணி முதல் 9.45 மணி வரை, நெரிசலில் சிக்கியவர்கள் ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பிரச்சாரத்தின்போது மின்சாரம் தடை செய்யப்பட்டதாக தகவல் பரப்பப்படுகிறது. ஆனால், பிரச்சாரத்தின்போது தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாக மின்சார வாரிய தலைமைப் பொறியாளர் விளக்கம் அளித்திருக்கிறார். மின் விளக்குகளும் அணைக்கப்படவில்லை. கூட்ட நெரிசல் அதிகரித்து, அருகேயுள்ள தற்காலிக ஜெனரேட்டர் அறைக்குள் கூட்டம் முண்டியடித்து உள்ளே நுழைய முயன்றபோது ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டது. அதனால்தான் போகஸ் லைட் எரியவில்லை.

கரூர் சம்பவத்தைப் பொருத்தவரை அரசு சார்பில் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல, சீனியர் எஸ்.பி. தலைமையில் போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களை போலீஸார் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்” என்று அவர் கூறினார்.

அப்போது, கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறும்போது, “கரூர் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கூறி அனுமதி கேட்கப் பட்டது. பொதுவாக 50 பேருக்கு ஒரு காவலர் பணியில் அமர்த்தப்படுவது வழக்கம். எனினும், விஜய் கலந்துகொண்ட முந்தைய கூட்டங்களில் கூடிய கூட்டத்தின் அடிப்படையில் 20 பேருக்கு ஒரு காவலர் என்ற அடிப்படையில் நியமித்தோம்.

கூட்டத்தினர் மீது போலீஸ் தடியடி நடத்தியதாக கூறுகிறார்கள். விஜய் கார் பின்னால் வந்த கூட்டம், அவரது கார் நின்றவுடன் முன்பக்கம் முண்டியடித்து வர முயற்சித்ததால், கூட்டத்தை விலக்கவே போலீஸார் முயற்சித்தனர். கூட்டம் அதிகரித்ததால் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர்” என்றார்.

சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் கூறும்போது, “திடீரென அதிக எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ்கள் எப்படி அங்கு வந்தன என்ற சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. நெரிசல் சம்பவம் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இரவு 7.14 மணிக்கு அழைப்பு வந்தது. உடனடியாக 7.20 மணிக்கு சம்பவ இடத்துக்கு ஓர் ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது.

பின்னர், இரவு 7.15 மணிக்கு அடுத்த அழைப்பு வரவே 7.23 மணிக்கு அடுத்த ஆம்புலன்ஸ் சென்றது. தொடர்ந்து அடுத்தடுத்து அழைப்புகள் வந்ததால், உடனடியாக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. தவெக கட்சி சார்பில் 7, அரசின் 108 ஆம்புலன்ஸ்கள் 6, மற்ற மாவட்டங்களில் இருந்து 33 ஆம்புலன்ஸ்கள் அங்கு சென்றன.

எதற்காக அவசரம் அவசரமாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது என்று கேட்கிறார்கள். பொதுவாக, அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் நிகழும்போது பிரேதப் பரிசோதனை செய்ய காலதாமதமாகும். இது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேதனையை அதிகரிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டு, நல்லெண்ணத்தில் அடிப்படையில் பிரேதப் பரிசோதனை விரைவாக செய்து முடிக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.