இஸ்லமபாத்,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
உணவுப் பொருள் மற்றும் மின்சாரத்துக்கு மானியம், பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டப்பேரவையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 12 இடங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 38 கோரிக்கைகளை அவாமி செயற்குழு (AAC) என்ற குடிமக்கள் சமுதாய கூட்டணி முன்வைத்தது.
பாகிஸ்தான் அரசுடன் இந்தக் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. போராட்டச் சூழல் காரணமாக, ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் செல்போன் மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டன. தொலைபேசி சேவைகளும் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர்.