லே,
காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட போது அதில் இருந்து பிரிக்கப்பட்ட லடாக்கும் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. லடாக்குக்கு தனி மாநில அந்தஸ்து கோரி தலைநகர் லே பகுதியில் அங்குள்ள லே உச்ச அமைப்பு சார்பில் கடந்த 24-ந் தேதி போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். வன்முறையை தொடர்ந்து லே மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் லே நகரில் இன்று 7 மணி நேரம் தளர்த்தப்பட்டது. வியாபாரிகள் தங்கள் நிறுவனங்களை திறக்க போலீஸ் அதிகாரிகள் அனுமதி அளித்தனர். ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பகுதிகளில் தளர்வை மேலும் நீட்டிப்பது குறித்து உருவாகும் சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார். பதட்டமான பகுதிகளில் தொடர்ந்து போலீசார், துணை ராணுவ படைகள் குவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே லே நகரில் கைது செய்யப்பட்ட காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் பிறரை விடுவித்து துப்பாக்கி சூடு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் வரை கார்கில் ஜனநாயக கூட்டணி மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க போவது இல்லை என்று தெரிவித்துள்ளது.