காசா,
கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் கடந்த 9-ந்தேதி வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதற்கு கத்தார் மற்றும் பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் இத்தாக்குதல் தொடர்பாக கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல்தானியிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மன்னிப்பு கேட்டு உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியை டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் நெதன்யாகு சந்தித்து பேசியபோது, அங்கிருந்து தொலைபேசியில் கத்தார் பிரதமரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கத்தாரில் உள்ள ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரு கத்தார் ராணுவ வீரர் தற்செயலாக கொல்லப்பட்டதற்கு நெதன்யாகு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்.
மேலும் கத்தார் இறையாண்மையை இஸ்ரேல் மீறியதற்கு அவர் வருத்தம் தெரிவித்தார். எதிர்காலத்தில் இஸ்ரேல் மீண்டும் அத்தகைய தாக்குதலை நடத்தாது என்பதை உறுதிப் படுத்தினார் என்று தகவல் வெளியாகி உள்ளது.