புதுடெல்லி:
நாடு முழுவதும் இன்று விஜயதசமி மற்றும் தசரா பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு வடிவங்களில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை தொடர்புடைய பல கதைகள் உள்ளன, அவற்றில் மிகவும் பிரபலமானது ராமன், ராவணனை, விஜயதசமியன்று வீழ்த்தி போரில் வெற்றிபெற்றார் என்பதாகும். இதை நினைவூட்டும் வகையில் வட இந்தியப் பகுதிகளில் இந்நாள், ராம்லீலா என்ற விழாவாக கொண்டாடப்படுகிறது. ராம பிரானின் அவதார லீலைகள் தொடர்பான கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இவ்விழாவின் இறுதியில் ராவண வதம் நிகழ்ச்சி நடத்தப்படும். ராவணனின் உருவபொம்மையானது, அம்பெய்து எரியூட்டப்படும். இதற்காக பெரிய மைதானங்களில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்படும். ராவண வதம் நிகழ்வை காண்பதற்காக ஏராளமான மக்கள் திரள்வார்கள்.
அவ்வகையில் டெல்லி செங்கோட்டை மைதானத்தில் உள்ள மாதவ்தாஸ் பூங்காவில் ஸ்ரீ தர்மிக் ராம்லீலா கமிட்டி சார்பில் இன்று நடைபெறும் தசரா நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்கிறார். இதேபோல் கிழக்கு டெல்லியின் பத்பர்கஞ்ச் பகுதியில் ராம்லீலா கமிட்டி சார்பில் நடைபெறும் தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். தசரா விழா நடைபெறும் இடத்திற்கு பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே தசரா விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராம்லீலா மைதானங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தசரா கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். எனவே, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தீயணைப்பு குழுவினர், மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.