அமெரிக்க அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது: ரஷ்ய அதிபர் புதின் உறுதி

சோச்சி: அயலக அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் இறக்குமதி வரியை டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் விதித்துள்ள சூழலில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள சோச்சி நகரில் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தொடர்பான நிகழ்வு நடந்தது. இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பங்கேற்ற இந்த நிகழ்வில் புதின் பேசியது: “ரஷ்யாவின் வர்த்தக ரீதியான கூட்டாளிகள் மீது அதிக வரிகள் விதிக்கப்பட்டால், அது உலக அளவில் எரிசக்தி பொருட்கள் மீதான விலையை உயர்த்தும். இதன் காரணமாக அமெரிக்க ஃபெடரல் மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படும். மேலும், இதனால் அமெரிக்க பொருளாதாரம் மந்தமாகும்.

எனது இந்திய பயணத் திட்டத்தை எதிர்நோக்கி உள்ளேன். இந்தியாவுடன் எங்களுக்கு எப்போதும் சிக்கல் இருந்ததில்லை. நிச்சயம் அயலக அழுத்தங்களுக்கு இந்திய தேசம் அடிபணியாது. அது மாதிரியான நகர்வை பிரதமர் மோடி அனுமதிக்கமாட்டார். இந்திய தேசம் ரஷ்யாவில் இருந்து எரிசக்தி பொருட்களை வாங்குவதை நிறுத்தினால் சுமார் 9 பில்லியன் முதல் 10 பில்லியன் டாலர்கள் வரை ரஷ்யாவுக்கு இழப்பு ஏற்படும்.

அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ரஷ்யா ஈடு செய்யும். அந்த வகையில் இந்தியாவில் இருந்து விவசாய பொருட்கள் மற்றும் மருந்துகளை ரஷ்யா வாங்கும். இதோடு நட்பு நாடு என்ற அந்தஸ்தும் இருக்கும். ஒருபக்கம் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது. அதே நேரத்தில் வேறு சிலவற்றில் ரஷ்யாவை சார்ந்தே அமெரிக்கா உள்ளது. அமெரிக்க சந்தைக்கு தேவைப்படும் யுரேனியத்தை விநியோகிக்கும் நாடுகளில் ரஷ்யா இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது” என்றார் புதின்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.