ஆமதாபாத்,
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. அதன்படி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி அந்த அணியில் தொடக்க வீரர்களாக தேஜ்நரின் சந்தர்பால் மற்றும் ஜான் கேம்ப்பெல் களமிறங்கினர். இதில் தேஜ்நரின் சந்தர்பால் ரன் எதுவும் எடுக்காமலும், ஜான் கேம்ப்பெல் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து அலிக் அதானேஸ் (12), பிரன்டன் கிங் (13), இருவரும் நிலைக்கவில்லை.
இந்திய அணியின் அபார பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. அணியில் அதிகபட்சமாக க்ரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.
இந்திய அணி தரப்பில் சிராஜ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இந்திய அணி தனது முதலாவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர்.
இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 68 ரன்களில் இருந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. ஜெய்ஸ்வால் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாய் சுதர்சன் ஏமாற்றமளித்தார். அவர் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய ராகுல் அரைசதம் கடந்தார். இந்திய அணி 38 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தபோது முதல்நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
ராகுல் 53 ரன்களுடனும், கேப்டன் கில் 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.