ஜகார்தா,
ஆசியாவில் அமைந்துள்ள நாடு இந்தோனேசியா. இந்நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணம் சிடொர்ஜொ நகரில் அல் ஹொசின் இஸ்லாமிய மதப்பள்ளி உள்ளது. இந்த மதப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மதப்பாடம் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மதப்பள்ளியில் கடந்த திங்கட்கிழமை மதியம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத வழிபாடு (தொழுகை) செய்துகொண்டிருந்தனர். அப்போது, மதப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில் மத வழிபாடு செய்துகொண்டிருந்த மாணவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4 நாட்களாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை, கட்டிட இடிபாடுகளுக்குள் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடைபெற்று 4 நாட்கள் ஆகியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.