ராய்ப்பூர்,
சத்தீஷ்காருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக இன்று இரவு 8 மணியளவில் ராய்ப்பூர் நகருக்கு விமானத்தில் வந்திறங்கிய அவரை முதல்-மந்திரி விஷ்ணு தியோ சாய் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். தொடர்ந்து பா.ஜ.க.வை சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்களும் அவரை வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து, பஸ்தார் மண்டல தலைமையகம் அமைந்த ஜெகதல்பூர் பகுதிக்கு பயணித்த அவர், கலாசார திட்டங்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நாடாளுமன்ற உறுப்பினர், பஸ்தார் தசரா கமிட்டி மற்றும் பழங்குடியின தலைவர்களின் அழைப்பின் பேரில் அவருடைய இந்த பயணம் அமைந்துள்ளது.
பஸ்தார் தசரா திருவிழாவின் ஒரு பகுதியாக நடைபெறும் முரிய தர்பார் என்ற பழங்குடியினத்தின் பாரம்பரிய திருவிழாவில் அவர் கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின்போது, நக்சலைட்டுகள் ஒழிப்பு நடவடிக்கைகளையும் அவர் மறுஆய்வு செய்வார் என கூறப்படுகிறது.
சத்தீஷ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் 22 பெண் நக்சலைட்டுகள் உள்ளிட்ட 103 நக்சலைட்டுகள் ஆயுதங்களை விடுத்து, போலீசார் முன்னிலையில் நேற்று சரண் அடைந்தனர். அவர்களில் 49 பேருக்கு எதிராக மொத்தம் ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அமித்ஷாவின் சத்தீஷ்கார் பயணம் அமைந்துள்ளது.