Mobile Recharge Price Hike in India: மாதந்தோறும் சிம் கார்டுகளுக்கு ரீச்சார்ஜ் செய்வது மக்களுக்கு பெரும் தலைவலியாக இப்போது மாறத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் இலவசங்களை வாரி வழங்கிய செல்போன் நிறுவனங்கள் இப்போது அடிப்படை பிளான்களின் விலையை மெல்ல மெல்ல உயர்த்திவிட்டன. அத்துடன், கட்டாயம் ரீச்சார்ஜ் செய்தால் மட்டுமே யாரையும் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையை செல்போன் நிறுவனங்கள் உருவாக்கிவிட்டன. ரீச்சார்ஜ் செய்யாதவர்கள் இன்கம்மிங் கால் கூட பேச முடியாது. நீங்கள் யார் ஒருவரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றாலும், உங்களை யார் ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்றாலும் நீங்கள் உங்கள் சிம் கார்டுக்கு கட்டாயம் ரீச்சார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது.
Add Zee News as a Preferred Source
இதனால், தங்கள் விருப்பத்துக்கு முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் பிளான்களின் விலையை சீரான இடைவெளியில் மளமளவென உயர்த்திவிட்டன. விரைவில் இப்போது இருக்கும் விலையும் உயர்த்த அந்த டெலிகாம் நிறுவனங்கள் முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சம் இந்தாண்டு இறுதிக்குள் மீண்டும் ஒருமுறை டேட்டா மற்றும் அழைப்புகளுக்கான விலை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது மக்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை மேலும் கூட்ட உள்ளது.
ஏற்கனவே, புலம்பிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த தகவல் கூடுதல் புலம்பலை கொடுக்க தொடங்கிவிட்டது. மக்களின் சிறு சேமிப்பை நிதியை இந்த டெலிகாம் நிறுவனங்கள் தங்களுக்கான வருமான வழியாக மாற்றிவிட்டனர். மாதம் மாதம் 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை சராசரியாக ரீச்சார்ஜ் செய்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு சிம் கார்டு வைத்திருப்பவர்கள் செலவழிக்கும் தொகை இதில் இரட்டிப்பாக கூட இருக்கலாம். ஏனென்றால், ஒரு சிம் கார்டு வைத்திருந்தவர்கள் பலரும் இரட்டை சிம் கார்டுக்கு மாறிவிட்டனர். அதனால், இரண்டாவது சிம் கார்டுக்கும் கூடுதலாக ரீச்சார்ஜ் செய்ய வேண்டிய நிலை உருவாகிவிட்டது.
மொபைல் நம்பர் ஆக்டிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மாதந்தோறும் இரண்டாவது சிம் கார்டுக்கு தேவையில்லாமல் ரீச்சார்ஜ் செய்து கொண்டிருப்பவர்களும் இங்கு ஏராளமானோர் உள்ளனர். இப்படி இருப்பவர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இப்படியான சூழலில் முன்னணி மொபைல் நிறுவனங்கள் மக்களின் கைகளை கட்டிப்போட்டு மாத ரீச்சார்ஜ் மூலம் பணத்தை வசூலித்துக் கொண்டிருக்கின்றன. இதில் இருந்து மீள்வதற்கு பொதுமக்களுக்கு வேறு ஆப்சனே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
ஆனால், 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இப்படியான ஒரு நிலை பொதுமக்களுக்கு இல்லை. ரீச்சார்ஜ் செய்யவில்லை என்றாலும் இன்கம்மிங் அழைப்புகள் வரும். மாதம் மாதம், கட்டாயம் நீங்கள் உங்கள் சிம் கார்டுக்கு ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. விரும்பினால் வெறும் 10 ரூபாய்க்கு கூட ரீச்சார்ஜ் செய்து, விரும்பியவர்களுடன் பேசிக் கொள்ளலாம். மற்றபடி பொதுமக்களுக்கு ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை.
ஆனால், இப்போது மாதம் மாதம் கட்டாயம் ரீச்சார்ஜ் செய்யவில்லை என்றால் நீங்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாது, உங்களையும் யாரும் தொடர்பு கொள்ள முடியாது. அப்படியே ரீச்சார்ஜ் செய்ய வேண்டும் என்றாலும் சராசரியாக 300 ரூபாய் வரை ரீச்சார்ஜ் செய்ய வேண்டும், கூடுதலாக அந்த ரீச்சார்ஜில் டேட்டா இருக்கும்.அந்த டேட்டா பயன்படுத்தவில்லை என்றாலும் மாத முடிவில் வீணாக போகும். டேட்டா தேவையில்லாதவர்களுக்கும் தேவையான பிளான்களின் விலையும் மிக அதிகமாகவே இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, மொபைல் நிறுவனங்களின் ரீச்சார்ஜ் திட்டங்கள் மீது மக்கள் மெல்ல மெல்ல அதிருப்தி கொள்ள தொடங்கிவிட்டனர் என்பதே எதார்த்தமான கள நிலவரம்.
About the Author
S.Karthikeyan